கடந்த ஐந்து ஆண்டுகளில் கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களைக் கண்டறிந்து சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது, என அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
திண்டுக்கல் அருகே சீலப்பாடியில் இந்துசமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.
அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆகியோர் புதிய கட்டிடத்தை திறந்துவைத்தனர்.
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசுகையில், ”அறநிலையத்துறை தொடங்கப்பட்ட காலத்தில் 10 ஆயிரத்திற்கும் குறைவான கோயில்கள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது அறநிலையத்துறையின் கீழ் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளன” என்றார்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணைஆணையர் பாரதி, உதவி ஆணையர் அனிதா, பரமசிவம் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்து சமய அறநிலையத்துறை மூலம் அனைத்து கோயில்களும் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகங்கள் நடத்த ஏதுவாக மண்டலங்களை தனித்தனியாக பிரிக்கப்படுகிறது. கடந்த ஐந்த ஆண்டுகளில் கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களை படிப்படியாக கண்டறிந்து சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களை மீட்டு உள்ளோம். வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் அனைத்தும் மீட்கப்படும். லண்டனில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டுள்ளன, என்றார்.
அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாள்களிடம் கூறுகையில், ”வனத்துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஆக்கிரமிப்பு செய்தவர்கள் சில இடங்களில் நீதிமன்றம் செல்வதால் மீட்கும் பணிகளில் காலதாமதம் ஏற்படுகிறது. அம்மா இருக்கும்போது கூட மன்னிப்பு கிடைக்கும். இப்போது இருக்ககூடிய ஆட்சியில் மன்னிப்பு கிடையாது. தண்டணை தான். உதாரணமாக பொள்ளாச்சி சம்பவத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்தவரை கைது செய்துள்ளோம். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், என்றார்.