இந்திய முக்கிய செய்திகள்…

 

* தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.

* நீட் தேர்வு விவகாரத்தில் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு இன்னும் 20 நாள்களில் அறிக்கை சமர்ப்பிக்கும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

* தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைப்பதற்கான வாய்ப்பு இப்போது இல்லை என நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு மாறாக நிதி அமைச்சரின் கருத்து அமைந்துள்ளது.

* தமிழகத்தில் புதிதாக 7,817 பேருக்கு கோவிட் தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. இது கடந்த இருமாதங்களில் இல்லாத குறைந்த எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

* புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பொருளாத நிலையை உயர்த்த கனவு செயல் திட்டத்தை தயாரித்து வருவதாக அதன் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

* புதுச்சேரி ஜிப்மரில் இன்றுமுதல் வெளிப்புற சிகிச்சை தொடங்குகிறது.

* காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனித் திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் இன்று தொடங்குகிறது. தொடர்ந்து 2ஆவது ஆண்டாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

* துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவான வழக்கில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். அவரை ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

* தமிழக சட்டப் பேரவையின் காங்கிரஸ் கொறடாவாக எஸ். விஜயதரணி நியமிக்கப்பட்டுள்ளார்.

* தமிழகத்தில் மின்துறை சார்ந்த கோரிக்கைகளுக்கு தொடர்பு கொள்வதற்காக 94987 94987 என்ற ஹெல்ப் லைன் எண்ணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

* கடந்த 17ஆம் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு தருமாறு மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்.

* மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

* தமிழகத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேருக்கு டெல்டா வைரஸ் கண்டறிப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ் வீரியமிக்கது என்பதால், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் சிலருக்கும், ஏற்கனவே தொற்று வந்தவர்களுக்கும் கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

* மத்திய அரசு நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதால், கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க இயலாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

* ஒலிம்பிக் போட்டிகள், கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு 2ஆம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி 28 நாள்களில் செலுத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இதற்காக தமிழகம் முழுவதும் 75 மையங்களில் அதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

* ஆந்திர பிரதேசத்தில் நேற்று நடந்த தடுப்பூசி முகாம்களில் பிற்பகல் 2 மணிக்குள் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் தடுப்பூசிகளை செலுத்தி, அந்த மாநிலம் சாதனை படைத்திருக்கிறது.

* டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக கம்ப்யூட்டர் ஆபரேட்டரான வினோத் குமார் சௌத்ரி, மூக்கால் கணினியில் வேகமாக தட்டச்சு செய்தது உள்பட 9 கின்னஸ் சாதனைகளை படைத்திருக்கிறார்.

* லட்சத்தீவின் நீதிமன்ற அதிகார வரம்பை கேரளாவிலிருந்து கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add your comment

Your email address will not be published.

nineteen − 4 =