10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து: ஐக்கிய அரபு அமீரகம் தகவல் | Over 1 million vaccines have been administered in the UAE

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் நோய்த் தடுப்பு மையம் தரப்பில், ”கடந்த 24 மணி நேரத்தில் 3,243 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் பலியாகி உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டினரையும் சேர்த்து இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் தொடர்ச்சியாக கரோனா தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாகவே ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கவனமாகக் கடைப்பிடிக்காததன் காரணமாக தொற்று அதிகரித்து வருவதாக அரசு கவலை தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 9 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

கரோனா ஊரடங்கால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். பல நாடுகளில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதுவும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா பரவலால் உலக நாடுகள் அச்சம் கொண்டுள்ளன.

நன்றி இந்து தமிழ் திசை