ஹரியாணாவில் விவசாயிகளின் எதிர்ப்பால் முதல்வர் பங்கேற்கவிருந்த கூட்டம் ரத்து | farmers protest

farmers-protest
ஹரியாணாவின் கர்னால் மாவட்டம் கேம்லா கிராமத்தில் வேளாண் சட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் விழா மேடையை அடித்து நொறுக்கினர்.படம்: பிடிஐ

புதுடெல்லி

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து பேசுவதற்காக ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் பங்கேற்கவிருந்த பொதுக்கூட்டம் விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லைப் பகுதிகளில் 45 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 8 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இதனிடையே, புதிய வேளாண் சட்டங்களின் சிறப்பம்சங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்குமாறு பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, ஹரியாணா மாநிலம் கேம்லா கிராமத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடத்த பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து பேச அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், முதல்வர் வருகை தருவதற்கு சற்று முன்பாக அங்கு திரண்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள், விழா மேடையை அடித்து நொறுக்கினர். இதனை தடுக்க முயன்ற போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர், தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் விவசாயிகளை போலீஸார் கலைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த முதல்வர் மனோகர் லால் கட்டார், கூட்டத்தை ரத்து செய்து பாதி வழியிலேயே திரும்பினார்.

நன்றி இந்து தமிழ் திசை