ஹரித்துவார் கும்பமேளாவில் திருநங்கைகளை தனி அஹாடாவாக அங்கீகரிப்பதில் சாதுக்கள் சபையினர் இடையே கருத்து மோதல் | Haridwar

ஹரித்துவாரில் நடைபெற உள்ள கும்பமேளாவில் புதிதாக அமைந்த திருநங்கைகள் அஹாடா, தன்னை தனிச்சபையாக அங்கீகரிக்கக் கோருகிறது. இதை அளிப்பதில் அகில இந்திய சாதுக்கள் சபையினர் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது.

இந்தியாவில் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி குரு சங்கராச்சாரியார் இந்துக்களையும், அவர்களது கோயில்களையும் காக்க வேண்டி ஏழுவகையான சாதுக்கள் சபைகளை அமைத்தார். இதன் பிறகு அப்பட்டியலில் மேலும் ஆறு இணைந்து மொத்தம் 13 வகைகளிலான சாதுக்கள் சபைகள் உருவாகின.

இவைகளுக்கு இடையே கும்பமேளா உள்ளிட்ட கூட்டங்களில் பங்கு பெறுவதில் கடும் மோதல்கள் ஏற்பட்டன. இதில் உயிர்பலிகளும் ஏற்பட்டதை தவிர்க்க 1954 இல் அகில இந்திய சாதுக்கள் சபை அமைக்கப்பட்டது.

இதன் நிர்வாகிகள் ஒவ்வொரு பகுதியின் கும்பமேளா அல்லது முக்கியக் கூட்டங்களுக்கு முன்னதாகக் கூடி ஆலோசனை செய்து சமாதான முறையில் செயல்படுகின்றனர். இந்நிலையில், உத்தராகண்டின் கங்கை நதிக்கரையில் வரும் ஏப்ரல் முதல் மார்ச் வரை கும்பமேளா நடைபெற உள்ளது.

இதன் முதல்நாளில் வரும் ராஜகுளியல் நிகழ்ச்சிக்காக, ஒவ்வொரு கும்பமேளாவிலும் 13 வகையான சாதுக்கள் சபைகளுக்கு அவர்கள் முக்கியத்துவத்தை வரிசைப்படுத்தி அனுமதி வழங்கப்படுகிறது.

இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று ஹரித்துவாரில் நடைபெற்றது. அகில இந்திய சாதுக்கள் சபையின் தலைவர் நரேந்தர கிரி தலைமையில் அனைத்து சபைகளின் தலைவர்களான சாதுக்கள் இதில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், புதிதாக அமைந்த திருநங்கைகள் சாதுக்கள் சபையினரை தனிக்குழுவாக அங்கீகரிக்கப்பதில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அகில இந்திய சாதுக்கள் சபையின் தலைவரான மஹந்த் நரேந்தர கிரி கூறும்போது, ‘கடந்த வருடம் அலகாபாத் கும்பமேளாவின் ராஜகுளியலுக்கு ஜுனா அஹாடாவுடன் சென்றது போல் திருநங்கைகள் சபையினர் செல்லலாம்.

ஆனால், ஹரித்துவாரில் அவர்களை தனிக்குழுவாக அங்கீகரிக்க சில சபையினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே அவர்களை ராஜகுளியலில் தனிக்குழுவாக அங்கீகரிக்க முடியாது.’ எனத் தெரிவித்தார்.

ஒவ்வொரு கும்பமேளாவின் ராஜகுளியல் நிகழ்ச்சியில் 13 சாதுக்கள் சபையினர் ஊர்வலமாக சென்று நதிகளின் நீரில் குளிப்பது வழக்கம். இந்த ஊர்வலத்தை இருபுறங்களிலும் வழிநெடுக பொதுமக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்தும்,வணங்கியும் சாதுக்களை உற்சாகப்படுத்துவார்கள்.

அப்போது சாதுக்கள் தங்கள் வாள், வில் அம்பு, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் வீரசாகஸங்களை செய்தபடியும், குதிரை மற்றும் யானைகளில் சவாரி செய்தபடியும் செல்வது உண்டு.

இதில், தனிக்குழுவாக சென்று கம்பீரம் காட்டுவது சாதுக்கள் சபையின் கவுரவமாகக் கருதப்படுகிறது. இதனால், கடந்த வருடம் அலகாபாத் கும்பமேளவில் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட திருநங்கைகள் சாதுக்களின் சபை ஹரித்துவாரில் தனிக்குழுவாக செயல்பட வலியுறுத்தி வருகிறது.

இவர்களுக்கு அனுமதி அளிக்கா விட்டால் தமது தலைவர்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாகவும் சில சாதுக்கள் சபையினர் மிரட்டி வருகின்றனர்.

இவர்களில் முக்கியமானவரான அகில இந்திய சாதுக்கள் சபையின் பொதுச்செயலாளரான மஹந்த் ஹரி கிரி கூறும்போது, ‘தற்போது மாறிவரும் காலத்திற்கு ஏற்ப சாதுக்களும் தம் நடவடிக்கைகளில் மாற்றம் கொள்வது அவசியம்.

இந்தமுறை கும்பமேளாவில் புதிய அஹாடாவான திருநங்கைகள் தனிக்குழுவாக ராஜகுளியலில் கலந்து

கொள்வார்கள். வேண்டுமானால் நானும் அவர்களுடன் சென்று கலந்து கொள்வேன். இதற்கு அனுமதிக்க மறுத்தால் நான் எனது பதவியை ராஜினாமா செய்வேன்.’ எனத் தெரிவித்தார்.

நம் நாட்டின் அனைத்து துறைகளிலும் வளர்ந்து வரும் திருநங்கைகள், ஆன்மீகத்தையும் விட்டு வைக்கவில்லை. இவர்களில் துறவறம் பூண்டு சாதுக்களாக மாறியவர்கள் தம்மை புதிய சபையாக அறிவிக்க பல வருடங்களாகப் போராடினர்.

இதற்கான அங்கீகாரம் கடந்த வருடம் கிடைத்தும் கும்பமேளாக்களில் அதன் முழுப்பலன் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாகக் கருத்தப்படுகிறது.-08-01-2021

நன்றி