ஸ்டாலின் சிங்கப்பூர் பறந்தார் | Stalin flew to Singapore
தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும், வரும் ஜனவரி 2024-ல் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் 9 நாள் அரசு முறைப் பயணமாக, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புறப்பட்டு சென்றார். இதையொட்டி இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன்பிறகு சென்னை விமானநிலையம் சென்றார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றிருந்தார். சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் வந்திருந்து வழியனுப்பி வைத்தனர்.
மேலும் தலைமை செயலாளர் இறையன்பு, மேயர் பிரியா, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.எல்.ஏ.க்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் வந்திருந்து வழியனுப்பி வைத்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அரசு உயர் அதிகாரிகளும் சென்றுள்ளனர். தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா 2 நாட்களுக்கு முன்பே சிங்கப்பூர் சென்று விட்டார். இன்று சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்நாட்டின் போக்குவரத்து தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரனையும்,
உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகத்தையும் மற்றும் அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக் மற்றும் கேப் பிட்டாலாண்டு இன்வஸ் மன்ட் அதிபர்கள் முதன்மை செயல் அலுவலர்களையும் சந்திக்க உள்ளார். இன்று மாலை நடை பெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) பேம்டி,
என் டான்சிம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பல்கலை கழகமான சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அமைப்பு மற்றும் சிங்கப்பூர் இந்தியா தொழில் வர்த்தக கூட்டமைப்பு ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும்
சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலைநிகழ்ச்சியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இன்றும், நாளையும் சிங்கப்பூரில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பிறகு ஜப்பான் புறப்பட்டு செல்ல உள்ளார். அங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.
GIPHY App Key not set. Please check settings