வேல்ஸ் மாகாணத்தில் 200 பேர் வேலையிழக்கும் அபாயம்

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட் மற்றும் கொவைட் 19 நோய்த்தொற்று காரணமாக பிரிட்டனின் வேல்ஸ் மாகாணத்தில், தனியார் நிறுவனம் ஒன்றில் 200}க்கும் மேற்பட்டோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வேல்ஸ் மாகாணத்தின் யஸ்ட்ராட் மினாச் பகுதியில், கவுடெக்ஸ் டெக்ஸ்ட்ரான் நிறுவனத்துக்கு சொந்தமான கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கிளை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. கவுடெக்ஸ் டெக்ஸ்ட்ரானில் ஏறத்தாழ 16 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். அதில், யஸ்ட்ராட் மினாச் கிளையில் மட்டும் 220க்கும் அதிகமானோர் பணியிலிருக்கின்றனர்.
இந்த நிலையில், பிரெக்ஸிட், கொவைட் 19 நோய்த்தொற்றுப் பரவலால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு காரணமாக இந்தக் கிளையை நிரந்தரமாக மூட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக இங்கு பணிபுரிந்து வரும் 220 பேரும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆள் குறைப்பு தொடர்பாக தொழிலாளர் யூனியனிடமும், தொழிலாளர்களிடமும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், மே மாத மத்தியில் பேச்சுவார்த்தை நிறைவு பெறும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவெ, பிரெக்ஸிட் காரணமாக இந்தத் துறை கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தங்களது இந்த நிலைப்பாட்டுக்கு பிரெக்ஸிட்டும், கொவைட் 19 நோய்த்தொற்றால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட விளைவுகளும்தான் காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

14 − 10 =