விரைவு, சொகுசு பேருந்துகளில் செல்ல 81 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவு; தமிழகம் முழுவதும் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்: சென்னையில் இருந்து 2,226 பேருந்துகளை இயக்க ஏற்பாடு | pongal special buses

தமிழகம் முழுவதும் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. அதன்படி, சென்னையில் இருந்து 176 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 2,226 பேருந்துகளை இன்று இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை, கோயம்புத்தூர் உட்பட பல்வேறு இடங்களில் வசித்து வரும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டதால், பெரும்பாலான பயணிகள் அரசு பேருந்துகளையே நம்பியுள்ளனர்.

இதற்கிடையே, பொங்கல் பண்டிகையையொட்டி, 3 நாட்களுக்கு 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில், சென்னையில் இருந்து மட்டும் 10,228 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் இருந்து கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து ஏற்கெனவே அறிவித்தவாறு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை, தேவையான இடங்களில் கூடுதலாக தற்காலிக நடைமேடைகள், 13 சிறப்பு கவுன்ட்டர்கள் திறப்பு, கண்காணிப்பு கேமராக்கள், பேருந்துகள் வருகை, புறப்பாடு குறித்து தகவல் அறிந்துகொள்ளதிரைகள், கட்டுப்பாட்டு அறைகள்,பயணிகள் தகவல் மையங்கள்அமைப்பது உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இணையதளத்தில் முன்பதிவு

தமிழகத்தில் 300 கி.மீ.க்கு அதிகமான தொலைவுள்ள இடங்களுக்குஅரசு விரைவு பேருந்துகளில் பயணிக்க www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்களில் பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று மாலை வரை மொத்தம் 81 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், சென்னையில் இருந்து மட்டும் 35 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவாகியுள்ளன. குறிப்பாக, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கோவை, திருப்பூர், ராமேசுவரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறுஇடங்களுக்கு சொகுசு, படுக்கை வசதி கொண்ட விரைவு பேருந்துகளில் அதிக அளவில் டிக்கெட்கள் முன்பதிவாகியுள்ளன.

இதுகுறித்து கேட்டபோது, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக 11-ம் தேதி (இன்று) முதல் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னையில் இருந்து 176 சிறப்பு பேருந்துகள்உட்பட மொத்தம் 2,226 பேருந்துகள்இன்று இயக்கப்படுகின்றன. சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து பேருந்து நிலையங்களில் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை வண்டலூர் அடுத்தகிளாம்பாக்கம் தற்காலிக பேருந்துநிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் வருகைக்குஏற்ப, பேருந்துகள் உள்ளே வரவழைக்கப்பட்டு வரிசையாக இயக்கப்படும். பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நன்றி இந்து தமிழ் திசை