விஜய்யின் ஒழுக்கம் வியக்க வைத்தது: மாளவிகா மோகனன் | malavika mohanan about vijay

விஜய்யின் ஒழுக்கம் வியக்க வைத்தது என்று ‘மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. நாளை (ஜனவரி 13) இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு நாயகியாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன்.

தமிழில் அவர் நாயகியாக நடித்துள்ள முதல் படம் ‘மாஸ்டர்’ என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு நாயகியாக நடித்தது குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார் மாளவிகா மோகனன்.

அதில் “விஜய் போன்ற நடிகரிடமிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள்?” என்ற கேள்விக்கு மாளவிகா மோகனன் கூறியிருப்பதாவது:

“ஒவ்வொரு நடிகருக்குமே தனிப் பாணி உள்ளது என நினைக்கிறேன். உதாரணத்துக்கு மோகன்லாலை நான் கவனிக்கும்போது படப்பிடிப்பில் நகைச்சுவை செய்து கொண்டிருப்பார். ஆனால், கேமராவின் முன் உணர்ச்சிகரமாக அழ வேண்டும் என்றால் கண் சிமிட்டும் நேரத்தில் அந்த நடிப்பைத் தருவார்.

விஜய்யைப் பொறுத்தவரை அவர் எப்படித் தயார் செய்து கொள்கிறார் என்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவரது ஒழுக்கம் வியக்க வைத்தது. நட்சத்திரங்கள் திரையில் நடிக்கும்போது எப்படி இதை எளிதாகச் செய்கிறார்கள் என்று தோன்றும்.

ஆனால், உண்மையில் அதற்காக நிறைய யோசனைகளும், ஆய்வும் நடக்கின்றன. பல பக்க வசனங்களைப் படித்து அதை ஒரே டேக்கில் பேசி முடிப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்த நட்சத்திர அந்தஸ்தைத் தாண்டி விஜய்யுடன் தொழில்முறையில் பணியாற்றியது உற்சாகம் அளிப்பதாக இருந்தது. அவர் அளவுக்கு பணியில் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்”.

இவ்வாறு மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

நன்றி இந்து தமிழ் திசை