வாழ்நாளில் குண்டாக கூடாது’ மகளை அடித்து துன்புறுத்திய தந்தைக்கு சிறை

இங்கிலாந்தில் அன்றாடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும், வாழ்நாளில் குண்டாகவே கூடாது என மகளை அடித்து துன்புறுத்திய, ஃபிட்னஸ் வெறிபிடித்த தந்தைக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை விதித்து ரீடிங் கிரவ்ண் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வின்ட்ஸர் டெட்வொர்த் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஜீத் காட்லா (வயது 56). உடற்பயிற்சியில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், தனது 3 பிள்ளைகளையும் அதே பாணியில் வளர்க்க எண்ணி, அவர்கள் உடற்பயிற்சி செய்ய மறுத்தால் கடுமையாக தாக்கத் தொடங்கினார்.

மேலும், அவர்கள் யாருடன் பழக வேண்டும், என்னென்ன செய்ய வேண்டுமென போதிக்கத் தொடங்கிய அவர், மறுக்கும்பட்சத்தில் பிள்ளைகளை மரக் கரண்டியால் ஈவு இரக்கமின்றி அடிக்கவும் தொடங்கினார். இதையெல்லாம் அவரது பதின் பருவ மகன் போலீஸôரிடம் கடந்த 2019}இல் தெரிவித்த பின்னர், வெளியுலகுக்கு இந்த சம்பவம் வர தொடங்கியது.

தனது தந்தையை மிகவும் புத்திசாலி என வர்ணித்த அந்த சிறுவன், தங்களது ஒவ்வோர் அசைவையும் அவர் உன்னிப்பாக கண்காணிப்பதாகவும் போலீஸôரிடம் தெரிவித்தான்.

இதையடுத்து, பெற்ற பிள்ளைகளை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டின்கீழ் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, கிரவ்ண் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கின் இறுதிகட்ட விசாரணை நீதிபதி கிரிஸ்டி ரியல் முன்பு நடைபெற்றது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், உடற்பயிற்சியிலும், உணவுக் கட்டுப்பாட்டிலும் அதீத ஆர்வம் கொண்டவர் காட்லா. எனவே, தனது வாழ்நாளில் நிறைய உடற்பயிற்சி செய்து சாகும்வரை குண்டாக மாட்டேன் என உறுதிமொழி அளிப்பதற்கான ஆவணத்தில் கையெழுத்திடுமாறு தனது மகளை அவர் அடித்து உதைத்து துன்புறுத்தியதாக வாதிட்டார்.

மற்றொரு வழக்குரைஞர் அலெக்ஸ் கிரிக்லர் வாதிடுகையில், அவரது மகளின் 9ஆவது வயதில் அவர் மீது நாற்காலியை தூக்கி வீசியதில் அவரது காதில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், அந்த சிறுமி ஏராளமான அறுவை சிகிச்சையும், மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ள நேரிட்டது என்று குறிப்பிட்டார்.

இதைக் கேட்டறிந்த நீதிபதி கிரிஸ்டி ரியல், ரஜீத் காட்லாவை பலவீனனைக் கொடுமைப்படுத்தும் புல்லி என்று குறிப்பிட்டதுடன், பல ஆண்டுகளாக பல்வேறு கொடுமைகளை இழைத்து பிள்ளைகளின் பால்ய பிராயத்தை திறம்பட அவர் சிதைத்துவிட்டதாகக் கண்டனம் தெரிவித்தார். இதற்காக அவருக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Add your comment

Your email address will not be published.

18 − nine =