வாட்ஸ்அப்பில் கட்டை விரல் முத்திரை பதிவிட்ட ரயில்வே சிறப்புப் படை காவலர்கள் பணி நீக்கம்: இயக்குனர் ஜெனரலுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் | Whats app thumbs up row

வாட்ஸ்அப் குழுவில் வந்த உயர் அதிகாரி ஒருவரை ரயில்வே பாதுகாப்பு படை வீரர் சுட்டுக்கொன்ற தகவலுக்கு பின்னால் கட்டை விரல் முத்திரையை பதிவிட்ட காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி கஜாமலை பகுதியை சேர்ந்த நரேந்தர் சவுகான், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

திருச்சி 5-வது ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை பட்டாலியனில் காவலராக பணிபுரிந்து வருகிறேன். ரயில்வே சிறப்பு பாதுகாப்ப படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் கடந்த 25.2.2018-ல், மேகாலயாவில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் அர்ஜூன் தேஷ்வால், தனது உயர் அதிகாரி எம்.சி.தியாகியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பதிவு வந்தது.

இந்தப் பதிவை படித்ததும் அதிர்ச்சி மற்றும் குழப்பம் அடைந்த நான், அந்த வாட்ஸ்அப் குழுவில் கட்டை விரலை உயர்த்தி காண்பிக்கும் முத்திரையை பதிவிட்டேன்.

இந்நிலையில் உயர் அதிகாரியை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் சுட்டுக்கொன்றது தொடர்பான வாட்ஸ்ப்அப் தகவலுக்கு பின்னூட்டம் அளித்த நான் உட்பட 7 பேரை விசாரணைக்கு அழைத்தனர்.

அப்போது உயர் அதிகாரிகளுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, தகவலை படித்ததும் வழக்கம் போல் கட்டை விரலை உயர்த்தி காண்பிக்கும் முத்திரையை பதிவிட்டதாக தெரிவித்தோம்.

இதையேற்காமல் உயர் அதிகாரியை கொலை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக குறுஞ்செய்தி அனுப்பியதாக என்னை பணியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டனர். இது சட்டவிரோதம். அற்ப காரணம் தெரிவித்து என்னை பணியிலிருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை காவலர் கமலேஷ்குமார் மீனாவும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஒய்.கிருஷ்ணன் வாதிடுகையில், வாட்ஸ்அப் தகவல்களுக்கு பதிலளிப்பவர்களுக்கு தண்டனை அளிப்பது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை. எனவே மனுதாரர்கள் மீதான நடவடிக்கையை நடவடிக்யை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

பின்னர் மனுக்கள் குறித்து டெல்லி ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல், தலைமை பாதுகாப்பு ஆணையர், திருச்சி கமாண்டிங் அதிகாரி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 10-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

நன்றி இந்து தமிழ் திசை