வன்முறையைத் தூண்டும் கருத்துகளை பரப்பியதால் அதிபர் ட்ரம்ப் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்க நடவடிக்கை எடுத்த இந்திய வம்சாவளி பெண் | donald trump twitter ban

 

donald-trump-twitter-ban
விஜயா காட்டே

வாஷிங்டன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின்ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கும் நடவடிக்கைஎடுக்கப்பட்டிருப்பது இதுவேமுதல் முறை. இந்த நடவடிக்கையின் பின்னணியில் இந்திய வம்சா வளியைச் சேர்ந்த 45 வயதான பெண் வழக்கறிஞர் விஜயா காட்டே இருந்துள்ளார்.

சமூக வலைதளமான ட்விட்டரில், அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட கருத்துகள்தான் அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட தூண்டியது என்பதால் அவரது கணக்கு முடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் சட்டம் மற்றும் கொள்கைவகுக்கும் பிரிவின் தலைவராக உள்ள விஜயா காட்டே வெளியிட்ட அறிக்கையில், ‘‘வன்முறை அதிகரித்து விடக் கூடாது என்பதற்காக ட்ரம்ப்பின் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பிறந்த விஜயா காட்டே, சிறு வயதிலேயே அமெரிக்காவுக்கு சென்றவர். ரசாயன பொறியாளரான இவரது தந்தைகல்ஃப் ஆப் மெக்ஸிகோ நிறுவனத்தில் பணியாற்றியவர். இதனால் நியூ ஜெர்சியில் தனதுபள்ளிப் படிப்பை முடித்தார். நியூயார்க் கார்னெல் பல்கலைக்கழக சட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பிறகு ஒரு தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பணியாற்றிய இவர் 2011-ம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் சேர்ந்தார்.நிறுவன வழக்கறிஞராக சேர்ந்த இவர், சிறப்பான கொள்கையை வகுத்து ட்விட்டர் நிறுவனத்தை கடந்த 10 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக செயல்பட வழிவகுத்துள்ளார். சர்வதேச நிறுவனமாக ட்விட்டர் வளர்ந்ததில் உலக நாடுகளுக்கேற்ப கொள்கைகளை வகுத்து அதை செயல்படுத்துவதில் இவரது பங்களிப்பு கணிசமானதாகும்.

கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல்அதிகாரியும் இணை நிறுவனருமான ஜாக் டோர்ஸி அதிபர் ட்ரம்பை அவரது ஓவல் அலுவலகத்தில் சந்தித்த போது, விஜயா காட்டேயும் உடனிருந்தார். அதேபோல 2018-ம்ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போதும் இவர் இருந்துள்ளார்.

இந்தியாவில் தலாய் லாமாசுற்றுப் பயணம் மேற்கொண்ட போது அவருக்கு அருகாமையில் விஜயா காட்டே இருப்பது போன்ற புகைப்படத்தையும் அவர் வெளியிட்டிருந்தார். சமூக வலைதளத்தில் மிகவும் வலிமை மிக்க பெண்மணி எனஅமெரிக்க நாளேடுகள் இவரைப் பற்றி கருத்து வெளியிட்டுள்ளன.

நன்றி இந்து தமிழ் திசை