வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்: துணை முதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள் | vanniyar reservation

வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக சமூகவலைதளங்களில் வரும் உண்மைக்கு புறம்பான செய்திகளை நம்ப வேண்டாம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்குமாறு பாமக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துவருகின்றன. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பதாக, சமூக வலைதளங்களில் சிலர் கருத்துகளை பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்குப் பதில் அளிக்கும் விதமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

வன்னியர் சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளை சில விஷமிகள் பரப்பி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.முற்றிலும் உண்மைக்கு புறம்பான இந்த கருத்துகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். வன்னிய சமுதாய சகோதர, சகோதரிகளுக்கு நான்இதுவரையிலும் நம்பிக்கைக்கு உரியவனாகவே இருந்திருக்கிறேன். இனிவரும் காலங்களிலும் நமது சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link