லண்டன் கண்காட்சியில் கோஹினூர் வைரம்
லண்டனில் நடைபெறவுள்ள கண்காட்சியில் கோஹினூர் வைரம் இடம்பெறவுள்ளது.
பிரிட்டன் அரசராக மூன்றாம் சார்லசும் அரசியாக அவரின் மனைவி கமீலாவும் அண்மையில் முடிசூட்டப்பட்டனர். பிரிட்டன் அரசிகளுக்கான கிரீடத்தில் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்டுள்ளது.
அந்த வைரமானது இந்தியாவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும். 1849}இல் பஞ்சாப் சமஸ்தான அரசர் அப்போதைய பிரிட்டன் சாம்ராஜ்ய மகாராணியிடம் அளித்தார். பல சாம்ராஜ்யங்களுக்கு இடையே கைமாறிய கோஹினூர் வைரமானது இறுதியாக பிரிட்டன் அரச வம்சத்தினரிடம் சென்றடைந்தது.
கோஹினூர் வைரத்துக்கு இந்தியா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. அந்த வைரத்தை பிரிட்டன் அரசிடமிருந்து திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டுமெனப் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும், கோஹினூர் வைரத்தை பிரிட்டனிடமிருந்து திரும்பப் பெறும் எண்ணம் இல்லை என மத்திய அரசு அண்மையில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், லண்டனில் நடைபெறவுள்ள கண்காட்சியில் கோஹினூர் வைரம் காட்சிப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைரம் பல சாம்ராஜ்யங்களுக்கு இடையே கைமாறியது தொடர்பான வரலாற்றுத் தகவலும் காணொலியாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பிரிட்டன் மாளிகைகளை நிர்வகித்து வரும் ‘ஹிஸ்டாரிக் ராயல் பேலசஸ்’ அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘கோஹினூர் வைரம் உள்ளிட்ட பிரிட்டன் அரச குடும்பத்தினரிடம் உள்ள பல்வேறு பொருள்களின் வரலாற்றுத் தகவல்கள் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.
போர் வெற்றியின் அடையாளமாகத் திகழும் கோஹினூர் வைரமானது, முகலாயர்கள், ஈரானின் ஷா ஆட்சியாளர்கள், ஆப்கனின் எமீரர்கள், சீக்கிய மகாராஜாக்கள் எனப் பல சாம்ராஜ்யங்கள் வழியே கைமாறியுள்ளது. இது தொடர்பாக வரலாற்று ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் விரிவான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
வரலாற்றை வெளிப்படையாகவும் சமநிலையுடனும் ஒருங்கிணைப்புத்தன்மையுடனும் வெளிக்காட்டும் வகையில் இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1849}ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி பஞ்சாப் மகாராஜா துலீப் சிங், பஞ்சாபையும் கோஹினூர் வைரத்தையும் பிரிட்டன் சாம்ராஜ்ய மகாராணி விக்டோரியாவிடம் ஒப்படைக்க நேர்ந்தது. 1852}ஆம் ஆண்டில் பிரிட்டன் பாரம்பரியத்துக்கு ஏற்ப வைரம் பட்டை தீட்டப்பட்டது.
அப்போதுமுதல் அரசர்கள் /அரசிகளின் கிரீடத்தில் கோஹினூர் வைரம் பொருத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு வைரத்தின் மாதிரியே கிரீடத்தில் பொருத்தப்பட்டு வருகிறது’ என்றார்.
வரும் நவம்பர் வரை இந்தக் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
GIPHY App Key not set. Please check settings