தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை மறைத்து வைத்து சில்லறைக் கடைகளுக்கு விநியோகம் செய்துவந்த நபர் உட்பட இருவரை போலீஸார் கைது செய்தனர். ரூ.8 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக எஸ்.பி. ராதாகிருஷ்ணனுக்குக் கிடைத்த ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அவரின் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி தேவநாதன் மற்றும் டிஎஸ்பி நல்லசிவம் தலைமையிலான தனிப்படை போலீஸார் மற்றும் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸார் நேற்று விழுப்புரம், அலமேலுபுரம் அருகே ஸ்கூட்டியில் வந்த அலமேலுபுரம் மாம்பழப்பட்டு ரோட்டைச் சேர்ந்த முருகேசன் (48) என்பவரை மறித்து சோதனை செய்தனர்.
முருகேசன் ஸ்கூட்டியின் இருக்கைக்குக் கீழ் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் தனது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை மறைத்து வைத்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சில்லறைக் கடைகளுக்கு விநியோகம் செய்வது தெரியவந்தது.
மேலும் அவரின் வீட்டை சோதனை மேற்கொண்டதில் ரூ.8 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இவருக்கு உறுதுதுணையாக புதுச்சேரி மாநிலம், திருபுவனையில் கிடங்கு வைத்து விழுப்புரம் மாவட்டத்திற்கு விநியோகம் செய்த, நெல்லை மாவட்டம், தென்காசியைச் சேர்ந்தவரும், தற்போது திருவண்ணாமலையில் வசிக்கும் சுபாஷ் சந்திரபோஸ் (45) என்பவரையும் கைது செய்து, அவர் வைத்திருந்த காரைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், ஓசூரைச் சேர்ந்த ஒருவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைக் கடத்தும் சிலரைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.