பிரிட்டன் பிரதமரானார் லிஸ் டிரஸ்

பிரிட்டன் பிரதமரானார் லிஸ் டிரஸ்

ஐரோப்பா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் பிரிட்டனின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து களம் கண்ட இந்திய வம்சாவளியான பிரிட்டனின் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இந்த வெற்றியின் மூலம் பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை லிஸ் டிரஸ் தட்டிச் சென்றுள்ளார்.

முன்னதாக பிரிட்டன் பிரதமராக பதவி வகித்த போரிஸ் ஜான்சனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து, பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் மற்றும் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வந்தன. பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் முதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், அந்த முன்னாள் நிதி அமைச்சருமான ரிஷி சுனக் முதலிடத்தில் இருந்தார். ஆனால், அதன் பின் நடைபெற்ற பல்வேறு கட்ட தேர்தல்களில் அவர் பின்னடைவை சந்தித்தார்.

கருத்து கணிப்பிலும் ரிஷி சுனக்கை விட லிஸ் டிரஸ் அமோக ஆதரவைப் பெற்று முதலிடத்தை தக்கவைத்தது உறுதியாகினது.

பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தபடி, 961 கட்சி உறுப்பினர்கள் தங்களது கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக தபால் மூலமாகவோ அல்லது ஆன்லைன் வழியாகவோ ஏற்கெனவே தங்களது வாக்குகளை செலுத்தியிருந்தனர். இதில், 60 சதவீதம் பேரின் ஆதரவு லிஸ் டிரஸுக்கு கிடைத்துள்ளது.

அதேசமயம், ரிஷி சுனக்கை கன்சர்வேடிவ் கட்சி தலைவராகவும், பிரிட்டன் பிரதமராகவும் தேர்வு செய்ய 28 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்திருந்தனர். 9 சதவீதம் பேர் நடுநிலை வகிப்பதாக கூறியிருந்தனர்.
கடந்த மாத தொடக்கத்தில் வெளியான ஆய்விலும் ரிஷி சுனக்கை காட்டிலும் லிஸ் டிரஸ் 32 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தது தெரியவந்தது.

தற்போது நடைபெற்ற இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கையில், ரிஷி சுனக்கை பின்னுக்குத்தள்ளி லிஸ் டிரஸ் வெற்றி வாகை சூடியுள்ளார். நாளை ஸ்காட்லாந்தில் பதவியேற்பு விழா பிரமாண்டமாக நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசெபத், லிஸ் டிரஸýக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதையொட்டி இன்று இரவே அனைவரும் ஸ்காட்லாந்து கிளம்புவர் என தெரியவருகிறது.