ராமேசுவரம் கடற்பகுதியில் தாமதமாக தொடங்கிய சிங்கி இறால் சீசன் | Singi Shrimp Season

ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி மீனவர்கள் நாட்டுப்படகு, விசைப்படகு உள்ளிட்டவைகள் மூலம் சீலா, மாவுலா, இறால், பாறை, நண்டு, கிளி, முரல் உள்ளிட்ட மீன்களை பிடித்தாலும் அதில் அதிக விலை கொண்டது சிங்கி இறால் மீன்கள்தான். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இந்த மீன்கள் அதிகம் பிடிபடும்.

இந்நிலையில், ராமேசுவரம் பகுதியில் இந்த ஆண்டு சிங்கி இறால் சீசன் தொடங்கி ஒரு மாதம் ஆகிறது. இந்நிலையில் பாம்பன், தனுஷ்கோடி, ராமேசுவரம் மீனவர்கள் வலைகளில் தற்போதுதான் சிங்கி இறால்கள் அதிகம் பிடிபடுகின்றன.

அதிக கிராக்கி கொண்ட சிங்கி இறால்கள் வியாபாரிகள் மூலம் கேரளாவில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, விமானம் மூலம் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, தாய் லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பப் படுகிறது. இதுகுறித்து பாம்பன் மீனவர்கள் கூறியதாவது: சிங்கி இறால் உயிருடன் இருந்தால் கிலோ ரூ.2000 முதல் ரூ. 3000 வரை விலை போகும்.

அதே மீன் இறந்து போனால் கிலோ ரூ.200-ல் இருந்து ரூ. 400-க்கு மட்டுமே விலை போகும். வெளிநாடுகளில் சிங்கி இறால்களை விரும்பி உட்கொள்வர். சிங்கி இறால்களில் கிளிசிங்கி, மணி சிங்கி என 2 வகைகள் உள்ளன. இதில் மணி சிங்கி பெரும்பாலும் மீனவர்கள் வலைகளில் கிடைத்தாலும், கிளிசிங்கி கிடைப்பது அரிதானது என்றனர்.

நன்றி இந்து தமிழ் திசை