ராமநாதபுரத்தில் வீடு இடிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி பலி: கர்ப்பிணி உள்ளிட்ட 2 பேர் காயம் | Ramnad: one dead as house collapses

ராமநாதபுரம் அருகே மழையால் ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார். அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் மைத்துனர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

ராமநாதபுரம் அருகே சூரங்கோட்டை ஊராட்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சண்முகராஜ்(22). இவரது மனைவி சங்கீதா(19). சங்கீதாவின் அண்ணன் கூலித்தொழிலாளியான மூர்த்தி(24). இவர்கள் 3 பேரும் நேற்று சண்முகத்தின் ஓட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அதிகாலை பெய்த மழையால் திடீரென ஓட்டு வீடு முற்றிலும் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் மூன்று பேரும் சிக்கிக் கொண்டனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் திரண்டு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

ஆனால் படுகாயம் அடைந்த சண்முகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மூர்த்தி மற்றும் நான்கு மாத கர்ப்பிணியான சங்கீதா ஆகியோரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுதொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீஸார் இறந்த சண்முகத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்ப்பிணி மனைவியைக் காப்பாற்றிவிட்டு உயிரிழந்த கணவன்:

இதுகுறித்து உயிர் தப்பிய சங்கீதா கூறியதாவது, ஓட்டு வீடு திடீரென இடிந்து விழுந்ததும் எழுந்த எனது கணவர் என்னை பிடித்து வீட்டின் வெளியே தள்ளிவிட்டார்.

அதனால் நான் காயத்துடன் உயிர் தப்பினேன். ஆனால் கணவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துவிட்டார். டிரம்செட் அடிக்கும் தொழிலுக்குச் சென்றுவிட்டு இன்று அதிகாலை 4 மணிக்குத்தான் வீட்டிற்கு எனது கணவரும், அண்ணனும் வந்தனர். வந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது, அதிகாலை சுமார் 5.30 மணியளவில் வீடு இடிந்து விழுந்துவிட்டது என அவர் தெரிவித்தார்.

நன்றி இந்து தமிழ் திசை