ரஷ்யா வருகிறேன்: அலெக்ஸி நாவல்னி | Putin Critic Navalny Says He Will Return To Russia On January 17

ரஷ்யாவுக்கு வர இருப்பதாக அந்நாட்டின் எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அலெக்ஸி நாவால்னி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னை கொலைச் செய்ய உத்தரவு பிறப்பித்த ரஷ்ய அதிபர் புதின் தனது பணியாளர்களுக்கு என்னை நாடு திரும்பாமல் செய்ய உத்தரவிட்டிருக்கிறார். ஜனவரி மாதம் 17 ஆம் தேதி நான் ரஷ்யா வருகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் வலியுறித்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.

ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. அவருக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி இந்து தமிழ் திசை