ரஜினி மக்கள் மன்றத்துடன் தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கம் இணைப்பு இல்லை. காந்திய மக்கள் இயக்கத்துக்குப் புதிய மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் குமரய்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காந்திய மக்கள் இயக்கம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:
“காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், கோவை மாவட்ட இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் 37 வருவாய் மாவட்டங்களைச் சேர்ந்த 85 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தமிழருவி மணியன் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனடிப்படையில் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவராக தமிழருவி மணியன் தொடர்கிறார். காந்திய மக்கள் இயக்கத்தின் அன்றாடச் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் இயக்கத்தின் மாநிலச் செயல் தலைவராக கோவையைச் சேர்ந்த டென்னிஸ் கோவில் பிள்ளையும், மாநிலத் துணைத் தலைவராக ஓகே டெக்ஸ் கந்தசாமியும், மாநிலப் பொதுச் செயலாளராக குமரய்யாவும், மாநிலப் பொருளாளராக நாகராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காந்திய மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை 3 லட்சத்திலிருந்து 10 லட்சமாக, அடுத்த ஆறு மாதங்களில் உயர்த்துவதற்கான களப்பணியை இந்த நிர்வாகக் குழு முனைப்புடன் செயல்படுத்தும்.
நேற்று (10.01.2021) இரவு சில செய்தி காட்சி ஊடகங்களில், காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைப்பதாக வந்த செய்தி கற்பனையானது. காந்திய இயக்கம் தனித்து இயங்கும். ரஜினி மக்கள் மன்றத்துடன் காந்திய மக்கள் இயக்கத்தின் தொடர்பு, சகோதரப் பாசத்துடன் நீடிக்கும்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.