முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: கடையநல்லூர் எம்எல்ஏ கோரிக்கை | Give 10% reservation for Muslims: Kadayanallur MLA

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கடையநல்லூர் எம்எல்ஏ முஹம்மது அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும் கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான முஹம்மது அபூபக்கர் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் கவுரவ துணைத் தலைவர் ஆதிப் ரஷீத்திடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்துக்கான 15 அம்ச திட்டங்கள் சமுதாயத்தினருக்கு சென்றடையவதில்லை. இத்திட்டத்தை விளம்பரப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய – மாநில அரசு வேலை மற்றும் கல்வி நிலையங்களில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

சிறுபான்மையினர் அதிகமாக வாழக்கூடிய மாவட்டங்களில் அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்த சிறுபான்மை சமுதாயத்தினருடனான விழிப்புணர்வு பணிகள் பரவலாக நடத்த வேண்டும்.

காவல் நிலையங்களில் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு அநீதி இழைக்கப்படுவதை தடுக்க அனைத்து காவல் நிலையங்களிலும் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவராவது உதவி ஆய்வாளர் பணி அந்தஸ்தில் நியமிக்கப்பட வேண்டும்.

பராமரிப்பின்றி, பலரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள வக்ஃப் சொத்துகளை பாதுகாத்து முஸ்லிம் சமுதாயத்தின் வளர்ச்சிக்கான பணிகள் நடைபெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் மூடப்பட்டிருக்கும் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறந்து வழிபடுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் அனைத்து மக்களும் முன்னேற்றம் அடைய வட்டியில்லா வங்கி நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும். இந்தியாவில் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

14 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வரும் அனைவரையும் ஜாதி, மத, வழக்கு வித்தியாசமின்றி கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடியவர்கள் மீது உள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

லவ் ஜிஹாத், பசுவதை தடை சட்டம் என்ற பெயரால் கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டு கொடூரமான முறையில் சிறுபான்மை சமுதாயத்தினர் திட்டமிட்டு தாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

நன்றி இந்து தமிழ் திசை