முதல் தடுப்பூசியை போட்டுக் கொள்கிறேன்: தெலங்கானா சுகாதார அமைச்சர் தகவல் | covid vaccine

covid-vaccine

ஹைதராபாத்:

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. இதனிடையே, கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் பெரிய அளவில் பக்கவிளைவுகள் ஏற்படும் என வதந்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில், ஹைதராபாத் நிம்ஸ் அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிறப்பு வார்டு கட்டும் பணிகளை தெலங்கானா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஈடல ராஜேந்தர் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

பொதுமக்களிடையே கரோனா தடுப்பூசி குறித்து பல சந்தேகங்கள் உள்ளன. இதனை போக்கும் வகையிலும், வீண் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் முதல் கரோனா தடுப்பூசியை நானே போட்டுக்கொள்கிறேன். புதிய ரக கரோனா தொற்று குறித்து தெலங்கானா மக்களுக்கு பயம் தேவையில்லை. இதேபோன்று பறவைக் காய்ச்சலுக்கும் மக்கள் பயப்பட வேண்டாம். மருத்துவத் துறைக்கு தேவைப்படுவதைவிட அதிக நிதி தேவைப்படுகிறது. இதுகுறித்து வரும்11-ம் தேதி முதல்வர் கே. சந்திரசேகர ராவுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

கரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பாக நடத்தப்பட்டது. தினமும் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கும் வகையில் நாம் தயாராக உள்ளோம். இவ்வாறு அமைச்சர் ஈடல ராஜேந்தர் கூறினார்.

நன்றி இந்து தமிழ் திசை