பிரிட்டனுக்கான மியான்மர் தூதரகத்தைக் கைப்பற்றிய ராணுவம்

பிரிட்டனுக்கான மியான்மர் தூதரகத்தை அந்நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்ட ராணுவம் கைப்பற்றி, தன்னை தூதரகத்திலிருந்து வெளியேற்றியதாக மியான்மர் தூதர் கியாவ் ஸ்வார் குற்றம்சாட்டினார்.
இதனால் புதன்கிழமை இரவு முழுவதும் காரில் கழிக்க நேர்ந்ததாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள மியான்மர் தூதரக ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு மியான்மர் ராணுவத்தின் தொடர்புடைய நபர்கள் தங்களை அச்சுறுத்தியதாகவும், தன்னை அந்நாட்டின் பிரதிநிதி அல்ல என்று அவர்கள் அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை, ராணுவம் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி கவிழ்த்து, அந்நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. அந்நாட்டின் தலைமை ஆலோசகர் ஆங்சான் சூகி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த காரணத்தால், மியான்மர் தூதர் கியாவ் ஸ்வார் லண்டன் தூதரகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, தூதரகத்தை முழுவதுமாக மியான்மர் ராணுவம் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “லண்டனுக்கு மத்தியிலும், ஒருவகையான ஆட்சிக்கவிழ்ப்பு அரங்கேற்றப்பட்டிருக்கிறது. நானும் வெளியேற்றப்பட்டிருக்கிறேன். ஆனாலும், இதுபோன்ற ஆட்சிக்கவிழ்ப்பு நிகழப் போவதில்லை” என்று தெரிவித்தார்.
இதுமட்டுமன்றி, லண்டன் மேஃபெர் பகுதியில் உள்ள மியான்மர் தூதரக வாயிலில் நின்றவாறு லண்டன் மெட்ரோபாலிட்டன் போலீஸாருடன் அவர் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Add your comment

Your email address will not be published.

two × 5 =