மாஸ்டர் பொங்கல் டா… திரையரங்கில் படம் பார்த்து ரசித்த கீர்த்தி சுரேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மாஸ்டர். 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வந்திருக்கிறது.

திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த போதிலும் மாஸ்டருக்கு விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருக்கும் மாணவர்களை தன்னுடைய ஆதாயத்துக்காக தவறான முறையில் பயன்படுத்தும் விஜய் சேதுபதியை ஒரு கல்லூரி பேராசிரியரான விஜய் ரெய்டு விடுவதுதான் மாஸ்டர் படத்தின் மையக்கரு.

லோகேஷ் கனகராஜ், சாந்தனு, அனிருத், மாளவிகா மோகனன் உள்ளிட்ட படக்குழுவினர் இன்றைய காலைக் காட்சியை சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் ரசிகராக கண்டுகளித்தனர். நடிகை கீர்த்தி சுரேஷ் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில் மாஸ்டர் படத்தைப் பார்த்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் எழுதியிருக்கும் கீர்த்தி சுரேஷ், “ஒரு வருடம் காத்திருந்து மீண்டும் தியேட்டருக்கு திரும்புவது எந்த அளவுக்கு மகிழ்ச்சியானது என்பதை விவரிக்க முடியவில்லை. மாஸ்டர் படத்தைக் காண வந்திருப்பது இன்னும் சிறப்பானது. இது மாஸ்டர் பொங்கல் டா” எனக் கூறியுள்ளார்.

மாஸ்டர் படத்தின் முதல் காட்சியை மதுரையில் உள்ள ஒரு தியேட்டரில் பார்த்து ரசித்த நடிகர் சூரி விஜய்யும் விஜய் சேதுபதியும் கலக்கி இருக்கிறார்கள் என்றும் படம் தியேட்டரில் வெளியானது சந்தோஷமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.