மார்ச் முதல் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பு மருந்து: இஸ்ரேல் | Israel expects to start vaccinating children by March, virus chief says

இஸ்ரேலில் மார்ச் மாதம் முதல் 12 வயதுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் அரசு வானொலியில் வெளியிட்ட செய்தியில், “இஸ்ரேலில் கடந்த சில நாட்களாகக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 லட்சத்துக்கும் அதிமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

75 வயதைக் கடந்த 80 சதவீதத்தினருக்குக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 12 வயதுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்க திட்டமிட்டுள்ளது. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் பைஸர் கரோனா தடுப்பு மருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் நவம்பர் மாதம் இஸ்ரேல் வந்தடைந்தன. மேலும், அமெரிக்காவின் மாடர்னா கரோனா தடுப்பு மருந்துகளைப் பெறவும் ஒப்பந்தம் போட்டுள்ளோம் என்று இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 9 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

நன்றி இந்து தமிழ் திசை