மானாமதுரையில் தொடர் மழையால் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி பாதிப்பு | Pongal Pot

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தொடர் மழையால் பொங்கல் பானை தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டது. மானாமதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்டத் தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் சீசனுக்கு ஏற்ப அகல்விளக்கு, அக்னிச்சட்டி, கூஜா, குதிரை, சாமி சிலைகள், பானை, அடுப்பு போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்டங்கள் சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட் டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை என்பதால் மண்பாண்டத் தொழிலாளர்கள் ஒரு மாதத்துக்கும் மேலாகப் பொங்கல் பானை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் பெய்யும் தொடர் மழையால் பானைகளை சூளையில் சுட வைக்க முடியாமலும், காய வைக்க முடியாமலும் தவிக் கின்றனர். இதனால் இந்தாண்டு குறைந்தளவு பானைகளே தயாரித்து உள்ளனர். மேலும் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மண்பாண்டத் தொழிலாளர்கள் கூறியதாவது:

கரோனா தொடங்கியதில் இருந்தே மண்பாண்டத் தொழில் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் மழையால் பொங்கல் பானை தயாரிப்பு பணி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் விற்பனையும் குறைந்துள்ளது. கடந்த காலங்களில் வெளியூர்களில் இருந்து மட்டுமே பல ஆயிரம் பானைகளுக்கு ஆர்டர் கிடைக்கும். இந்தாண்டு மிக குறைந்த ஆர்டரே கிடைத்துள்ளது. அதேபோல் அடுப்பு விற்பனையும் குறைந்து விட்டது, என்று கூறினர்.

நன்றி இந்து தமிழ் திசை