தை திருநாளை முன்னிட்டு தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை தொடங்கியது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, இளம் காளையர்கள் அடக்க முயன்றனர்.
தை மாதம் பிறந்துவிட்டாலே மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு களைகட்டிவிடும். அதிலும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என வரிசையாக ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடக்கும். இதைக் காண சர்வேச அளவில் இருந்து பார்வையாளர்களும் ஆண்டுதோறும் வருவார்கள்.
அந்தவகையில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை தொடங்கியது. அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து ஜல்லிக்கட்டுப் போட்டிைய தொடங்கி வைத்தார்.
இதில், 430 வீரர்ர்களும், 788 காளைகளும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தியபின்புதான் அனுமதிக்கப்பட்ட, பார்வையாளர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துவரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாடிவாசல் அமைக்கப்பட்டு, பார்வையாளர்கள் மாடம் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. காளைகள் விளையாடும் இடங்களில் தென்னை நார் கழிவுகள் கொட்டி நிரப்பட்டுள்ளது.போட்டியில் பங்கேற்போர், பார்வையாளர்களுக்காக குடிநீர், நடமாடும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் பார்வையிட உள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தென்மண்டல ஐஜி முருகன் மற்றும் மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் 1,500 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவனியாபுரத்தை தொடர்ந்து 15ம் தேதி பாலமேட்டிலும், 16-ம்தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியும் நடக்கின்றன.