பொங்கல் விழாவுக்கு எதிர்ப்பு: மதுரையில் பாஜகவினர் கார்கள் மீது கல் வீச்சு; புறநகர் மாவட்ட அலுவலகம் சூறை | bjp pongal festival

மதுரை திருப்பாலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொள்ளச் சென்ற பாஜகவினர் மீது கல் வீசப்பட்டது. புறநகர் மாவட்ட பாஜக அலுவலகம் சூறையாடப்பட்டது.

மதுரை திருப்பாலையில் மந்தை திடல் உள்ளது. இங்கு நேற்று பொங்கல் விழா நடத்த பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதையொட்டி, அப்பகுதியில் பாஜக கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் ஓட்டப்பட்டிருந்தன.

ஆனால் பாஜகவின் கொடிகளை நேற்று முன்தினம் இரவு அப்புறப்படுத்தி இருப்பதும், சுவர் விளம்பரங்களை அழித்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார்தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மந்தை திடல் பகுதியில் போலீஸார் நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை 11 மணி அளவில் பள்ளிவாசல் சாலை வழியாக கார்களில் மந்தைத் திடலுக்குச் சென்றனர்.

இதற்கு இஸ்லாமியர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கார்களை வழிமறித்து கல் வீசி தாக்கினர். இதில் பாஜக நிர்வாகி ஹரிஹரன் உட்பட பலரது கார்கள் சேதம் அடைந்தன.

இதையடுத்து அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இரு தரப்பினரையும் போலீஸார் சமரசம் செய்தனர். இதையடுத்து எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினரின் வாகனங்கள் வேறு வழியாக மந்தைத் திடலுக்குச் சென்றன.

விழா முடிந்து பள்ளி வாசல் வழியாக பாஜகவினர் திரும்பிச் செல்ல அனுமதிக்கக் கூடாது என இஸ்லாமியர் கோரிக்கை விடுத்தனர். எனவே மூன்று மாவடி வழியாக பாஜகவினர் திரும்பிச் செல்ல போலீஸார் ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், திருப்பாலை பகுதியில் போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை மேலமடை போலீஸ் சிக்னல் அருகே உள்ள பாஜக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் 6 பேர் கொண்ட கும்பல் நேற்று மாலை உள்ளே புகுந்து அங்குள்ள சேர், டேபிள்கள் மற்றும் பிரதமர் மோடி, மாநிலத் தலைவர் எல்.முருகன்ஆகியோரது புகைப் படங்களை அடித்து சேதப்படுத்தினர்.

மதுரை அண்ணா நகர் காவல்உதவி ஆணையர் லில்லி கிரேஸ், ஆய்வாளர் பூமிநாதன் நேரில் சென்று தாக்குதலின்போது அங்கிருந்த பாஜக புறநகர் மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரனிடம் விசாரித்தனர். கட்சி அலுவலகம் மற்றும் சிவகங்கை சாலையில் உள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை சேகரித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

இச்சம்பத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி அக்கட்சியினர் கட்சி அலுவலகம் அருகே சாலை மறியல் செய்தனர்.

பொய்ப் பிரச்சாரம்

மதுரை புறநகர் மாவட்ட பாஜக சார்பில் திருப்பாலையில் `நம்ம ஊர் பொங்கல் விழா’ கொண்டாடப்பட்டது. இதில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்துப் பொய் பிரச்சாரம் செய்கின்றன. வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் பலன் தரும். விளை பொருட்களின் விலையை விவசாயிகளே நிர்ணயம் செய்ய முடியும். இதனால் உண்மையான விவசாயிகள் வேளாண் சட்டங்களை ஆதரிக்கின்றனர்.

பட்டியல் பிரிவில் உள்ள 7 சாதிகளை ஒன்றாகச் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் எனப் பொதுப் பெயரில் அழைக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது பாஜகதான். இக்கோரிக்கையை மத்திய அரசு விரைவில் நிறைவேற்றும்.

இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

நன்றி இந்து தமிழ் திசை