பொங்கல் விடுமுறை நாட்களில் கடற்கரையில் கூட மக்களுக்கு அனுமதியில்லை… ஜன.15முதல் 17 வரை தடை

சென்னை: ஜனவரி 15,16 மற்றும் 17ஆம் தேதிகளில் அனைத்து கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசு எடுத்து வரும் அனைத்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் அனைவரும் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ந்து 4 நாட்கள் கொண்டாடப்படும் இந்நன்னாளில், மக்கள் வெளியே செல்வது வழக்கம். குறிப்பாக, காணும் பொங்கல் தினத்தின்று பூங்கா, கோவில்கள், கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். இன்னும் கொரோனா பரவல் முழுமையாக ஓயாததால், காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு தளர்வுகளும் அமலுக்கு வந்தன. இந்த நோய்த்தொற்றில் இருந்து பொதுமக்களை காத்து, உரிய நிவாரணங்களை வழங்கி தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன் விளைவாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் காணும் பொங்கல் அன்று கடற்கரையில் அளவுக்கு அதிகமாக மக்கள் கூட்டம் கூடுவர். இதனால் கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று ஏற்கனவே

உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்குறிப்பிட்ட அனைத்து இடங்களிலும் வரும் ஜனவரி 15, 16, 17 ஆகிய விடுமுறை நாட்களில் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இதே போல பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா, மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள கிண்டி தேசிய பூங்காவிலும் மற்றும் மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது. வண்டலூர் பூங்கா, கிண்டி தேசிய பூங்கா , மாமல்லபுரம், மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் அனுமதி இல்லை என்றும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசு எடுத்து வரும் அனைத்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் அனைவரும் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.