பொங்கல் பரிசு தொகுப்புக்கு கொள்முதல், தொடர் மழையால் நெல்லைக்கு கரும்புகள் வரத்து குறைவு: ஒரு கரும்பு ரூ.30 வரை விற்பனை | Pongal gift

 

pongal-gift
திருநெல்வேலியில் மழைக்கு மத்தியிலும் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது. டவுன் மேற்கு ரத வீதியில் விற்பனைக்காக வந்திறங்கியுள்ள கரும்புகள். படம்: மு. லெட்சுமி அருண்.

திருநெல்வேலி

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு வழங்க கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் நடைபெற்றதாலும், தொடர் மழையாலும் திருநெல்வேலியில் உள்ள சந்தைகளுக்கு இவ்வாண்டு கரும்பு வரத்து குறைந்துள்ளது.

பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் திருநெல்வேலியில் தற்போது பல்வேறு இடங்களில் விற் பனைக்காக கரும்புக் கட்டுகள் குவிக்கப்பட்டுள்ளன. வரத்து குறைவால் 10 எண்ணம் கொண்ட ஒரு கட்டு கரும்பு ரூ.300 வரையும், ஒரு கரும்பு ரூ.20 முதல் ரூ.30 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து கரும்பு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரும்பு விலை குறைந்திருந்த நிலையில் தற்போது விலை அதிகரித்துள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:

இவ்வாண்டு தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படுகிறது. இதற்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் மொத்தமாக கரும்பு கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் மொத்த வியாபாரி களுக்கு போதிய அளவுக்கு கரும்பு வழங்க முடியவில்லை. ஒரு கட்டு கரும்பு வழக்கமாக மொத்த வியாபாரிகளுக்கு ரூ.100 முதல் ரூ.125-க்கு விற்கப்படும். ஆனால் இவ்வாண்டு தேவை அதிகரித்ததால் கொள்முதல் விலை ரூ.150-க்குஅதிகமாக இருந்தது. அத்துடன் போக்குவரத்து செலவு, வேலையாட்கள் கூலி சேர்ந்துள்ளதால் ஒரு கட்டு கரும்பு ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவித்தனர்.

நன்றி இந்து தமிழ் திசை