பொங்கல் பண்டிகையை ஒட்டி, கிராஸ்கட் ரோடு மாநகராட்சிப் பள்ளியில் இயற்கைப் பொருட்களால் நிரம்பிய நம்ம ஊரு சந்தை அமைக்கப்பட்டதை அடுத்து, அங்குள்ள பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகின.
கோவை காந்திபுரம், கிராஸ்கட் ரோடு பவர் ஹவுஸ் அருகில், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட சிறு இயற்கைப் பொருட்களின் உற்பத்தியாளர்கள், நம்ம ஊரு சந்தை என்ற பெயரில் கடைகளை அமைத்திருந்தனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி கோவையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக இங்கு வந்து, தங்களுக்குத் தேவையான இயற்கைப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
இதுகுறித்து நம்ம ஊரு சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:
”இச்சந்தையில் முழுக்க, முழுக்க இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறு உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை இங்கு நேரடியாக விற்பனை செய்கின்றனர்.
பாரம்பரிய அரிசி வகைகள், சிறு தானியங்கள், நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, தேன், காய்கறிகள், கீரைகள், பழங்கள், நாட்டுக் கோழி மற்றும் வாத்து முட்டை, மரச்செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பலவகை ஊறுகாய்கள், மசாலா பொருட்கள், நோய் நீக்கப் பயன்படும் மூலிகைகள், உணவாகப் பயன்படும் மூலிகைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் குளியல் பொடி, தேங்காய் நார், தூய பருத்தி ஆடைகள், கைப்பைகள், பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட முறம், கூடை, அலங்காரப் பொருட்கள், கப், பொங்கல் பண்டிகைக்குப் பயன்படும் அனைத்து வகை மண்பாண்டப் பொருட்கள், மூங்கில் பொருட்கள், மரச் சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான இயற்கைப் பொருட்கள் இச்சந்தையில் இடம் பெற்றன.
இது தவிர பாரம்பரிய அரிசி மற்றும் தானியங்களால் செய்யப்பட்ட உணவுகள், மூலிகைத் தேநீர், மலர்ச்சாறு, கனிச்சாறு, நீராபானம் போன்ற பொருட்கள் வைக்கப்பட்டன.
எவ்விதக் கலப்படமும் இல்லாத, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இப்பொருட்களைப் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். இதேபோல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் பருத்தியால் ஆன உடைகள், குழந்தை ஆடைகளுக்கும் அதிக வரவேற்பு இருந்தது”.
இவ்வாறு நம்ம ஊரு சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.