புதுச்சேரியில் புள்ளிகள் அடிப்படையிலான ஆசிரியர் பணியிடமாற்றம் முதல்வரிடம் ஆசிரியர்கள் முறையிட்டு மனு
புதுச்சேரியில் புள்ளிகள் அடிப்படையிலான ஆசிரியர் பணியிடமாற்றம் கொள்கையை கைவிடக்கோரி முதல்வரிடம் ஆசிரியர்கள் முறையிட்டு மனு.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியை ஆசிரியர்கள் சந்தித்து பணியிடமாற்றக்கொள்கையை மாற்றக்கோரி மனு தந்தனர்.
அந்த மனுவில், “கல்வித்துறையோ, துறை ஆய்வாளர்களோ ஆவணங்களை சரிபார்க்காமல் தனிப்பட்ட ஆசிரியர்கள் தரும் தகவல்களை வைத்து குளறுபடி நிறைந்த புள்ளியியல் மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடமாற்றல் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் தரும் தகவல்களை சரிபார்க்க கல்வித்துறையிடம் போதிய ஆவணமில்லை. அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் 10, 12ம் வகுப்பு பாடம் எடுக்க வாய்ப்பு தருவதில்லை. வாய்ப்பு பெற்றவர்கள் மட்டுமே கூடுதல் புள்ளிகள் பெற தகுதியானவர்கள் என குறிப்பிடுவது சரியானதல்ல
வெளிப்படை மற்றும் நம்பகத்தன்மை உடைய பணிமூப்பு அடிப்படையிலான கலந்தாய்வு முறையை தொடர்ந்து அமல்படுத்தவேண்டும். ” என்றனர்.
அதைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த அனைத்து நிலை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்புக்குழு தரப்பில் கூறியதாவது:
கல்வித்துறை பணியிடமாற்றல் கொள்கையில் குளறுபடி உள்ளது. ஆசிரியர்களுக்கு மதிப்பெண் தருவது பாகுபாடு ஏற்படுத்தும். இதை கைவிட வேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில் பணியிடமாற்றத்தை செய்யலாம். 7 ஆண்டுகளாக பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தொடக்கப்பள்ளிக்கு 146 பணியிடங்கள் நிரப்பபடவுள்ளது. ஆங்கிலம், கணக்கு, சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் 7 ஆண்டுகளாக இல்லை. நகரப்பகுதியில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. 3 சங்கங்கள் குளறுபடி உள்ளதாக தெரிவித்துள்ளனர். புதிய ஆணையை வெளியிடவேண்டும். நடுநிலைப்பள்ளிக்கு அனைத்து பாடத்துக்கும் ஆசிரியர்கள் தேவை. பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.
GIPHY App Key not set. Please check settings