பில்லிங்ஹாமில் 6 கோடி நோவாவாக்ஸ் தடுப்பூசி தயாரிப்பு

 

இங்கிலாந்தின் பில்லிங்ஹாம் டீஸ்ஸைடு பகுதியில் செயல்பட்டுவரும் நோவாவாக்ஸ் நிறுவன தொழிற்சாலையில், கரோனாவுக்கு எதிராக 6 கோடி தடுப்பூசிகளை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகளை பிரிட்டன் அரசு கடந்த பிப்ரவரியில் ஆர்டர் செய்வதற்கு முன்பாகவே, தடுப்பூசி தயாரிப்பில் அந்நிறுவனம் ஈடுபாடு காட்டியது. இதற்காக 300 ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.
தடுப்பூசிகள் அனைத்தும் கோடை காலத்துக்குள் தயாராகிவிடும் என்று கூறிய நோவாவாக்ஸ் நிறுவன சிஇஓ மார்டின் மீஸன், இதற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவரும் தனது குழுவை நினைத்து பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
நோவாவாக்ஸ் தடுப்பூசி தற்போது பிரிட்டனின் சிகிச்சை மற்றும் சுகாதார உற்பத்திப் பொருள்கள் ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிசீலனையில் இருக்கிறது. இரண்டு தவணைகளாக செலுத்தப்படும் இந்தத் தடுப்பூசி, கரோனாவுக்கு எதிராக போரிடுவதில் 89.3% செயல்திறன் வாய்ந்தது என்றும், பிரிட்டனில் உருமாறிய கரோனாவுக்கு எதிராக 86% செயல்திறனை கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது, பிரிட்டனில் இந்த தடுப்பூசி 3ஆம் கட்ட ஆய்வில் இருக்கிறது. அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை போல், இதையும் வழக்கமான குளிர்சாதனப் பெட்டி வெப்பநிலையில் வைத்து பராமரிக்கலாம். இதன்மூலம் இதை விநியோகிப்பது எளிது.
இதனிடையே, கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் நோவாவாக்ஸ் தடுப்பூசி முக்கியமான ஆயுதமாக திகழ்வதாக பிரிட்டன் தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ஆடம் பிண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Add your comment

Your email address will not be published.

4 × three =