பிரிட்டன் கொரோனாவை விட மாறுபட்ட கொரோனா ஜப்பானில் கண்டுபிடிப்பு

டோக்கியோ: பிரிட்டனில் உருவான உருமாறிய கொரோனாவில் இருந்து மாறுபட்ட புதிய வகை உருமாறிய கொரோனா, ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியது. இந்நிலையில், அந்த வைரசில் இருந்து உருமாற்றம் பெற்ற வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டது. இது முன்னதாக பரவிய கொரோனா தொற்றை விட வீரியமிக்கதாகவும் 70 சதவீதம் வேகமாக பரவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இதுவும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இது 2ம் வகை கொரோனா என கூறப்பட்டது.

இந்நிலையில் ஜப்பானில் இவற்றையெல்லாம்விட மாறுபட்ட 3ம் வகை கொரோனா வைரஸ் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் இருந்து விமானத்தில் டோக்கியோ விமான நிலையத்துக்கு வந்த 4 பேரிடம் இந்த புதிய கொரோனா உறுதி செய்யப்பட்டது. 45 வயதான ஆண், 35 வயதான பெண், 19 வயதுக்குட்பட்ட ஒரு ஆண், பெண் ஆகியோருக்கு இந்த கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் 2 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும், 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.