பாலியல் வழக்கில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்: கனிமொழி எம்.பி. உறுதி | kanimozhi mp

பாலியல் வழக்கின் பின்னணியில் உள்ள முக்கியப் பிரமுகர்களை கைது செய்ய வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் பொள்ளாச்சி காந்தி சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கனிமொழி எம்.பி. பேசியதாவது:

தேர்தல் பிரச்சாரத்துக்காக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்காக, தமிழகம் முழுவதும் உள்ள மக்களின் குரலாகவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிடுவது சட்டப்படி குற்றம் எனத் தெரிந்தும், அப்பெண்ணின் அடையாளத்தை போலீஸார் வெளியிட்டனர். யாரும் புகார் கொடுக்க முன்வரக் கூடாது என பெண்களை மிரட்டுவதற்காகவே, அந்தப் பெண்ணின் பெயர் வெளியிடப்பட்டது. இதில் நியாயமான விசாரணை நடத்த ஆளுங்கட்சி தயாராக இல்லை. அருளானந்தம் கைது செய்யப்பட்டதால்தான், இந்த சம்பவத்துக்கும், ஆளுங்கட்சிக்கும் தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரம் வெளியே வருகிறது.

இந்த வழக்கு விசாரணையை தடுக்க பல்வேறு முயற்சிகள் நடந்துள்ளன. தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் நிகழப்போகிறது. பாலியல் வழக்கில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு கனிமொழி எம்.பி. செல்லும்போது, கோவை ஈச்சனாரி அருகே போலீஸார் தடுப்புகளை அமைத்திருந்தனர். அவ்வழியாக செல்வதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து, போலீஸாருக்கு எதிராக கோஷமெழுப்பினர். பின்னர், போலீஸாரின் தடுப்புகளை அகற்றிவிட்டு திமுகவினர் பொள்ளாச்சிக்கு காரில் புறப்பட்டுச் சென்றனர்.

நன்றி இந்து தமிழ் திசை