பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு ரிஷி சுனக் கண்டனம்
பாலஸ்தீனத்தின் காஸாவில் 36 நாள்களாக நடக்கும் இஸ்ரேலின் தாக்குதலில், 11,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இதுவரை உயிரிழந்திருக்கின்றனர். குழந்தைகள் மட்டுமே 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.
காஸாவில் சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தெரிவித்திருக்கிறார். பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காதவரைப் போர் நீண்டுகொண்டே போகும் எனக் கூறும் இஸ்ரேலுக்கு, சர்வதேச நாடுகளிடமிருந்து தொடர்ந்து கண்டனங்கள் வலுத்துவருகின்றன .
மருத்துவமனைகளில், அகதிகள் முகாம்களில் தண்ணீர், உணவு, மின்சாரம், மருந்துப் பற்றாக்குறை போன்றவற்றால் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பிரிட்டனில், போர் மரண நினைவு தினத்தைக் குறிக்கும் போர் நிறுத்த நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் 30,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பாலஸ்தீனர்களுடனான தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும்விதமாக, காஸா பகுதியில் இஸ்ரேலின் குண்டுவீச்சுக்கு எதிராகப் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து போராட்டம் நடத்தினர்.
போர் நிறுத்த நாள் காரணமாக இந்தப் போராட்டத்தை ரத்து செய்ய பிரிட்டன் அமைச்சர் உத்தரவிட்டபோதும், போராட்டம் தொடர்ந்தது. இதை எதிர்த்து வலதுசாரிக் குழுக்கள் செனோடாப் போர் நினைவுச் சின்னத்துக்கு அருகில், பாராளுமன்றம், வெஸ்ட்மின்ஸ்டரில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டன. அப்போது காவல்துறைக்கும் அவர்களுக்கும் மத்தியில் மோதல் ஏற்பட்டது. லண்டனில் நடைபெற்ற இந்த பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்