பாமக நிறுவனர் ராமதாஸை 2-வது முறையாகச் சந்தித்த அமைச்சர்கள் | Ministers meet Ramadoss for the 2nd time

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டது. இதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.

இதற்கிடையே தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அதிமுக அரசை வலியுறுத்தி பாமக 4 கட்டப் போராட்டங்களையும் நடத்தியது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, வருகின்ற 21-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த 22-ம் தேதி அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் பாமக நிறுவனர் ராமதாஸைச் சந்தித்து இட ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் சென்னையில் பாமக சார்பில் கடந்த 8-ம் தேதி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருடன் பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே மூர்த்தி, முன்னாள் எம்.பி. தன்ராஜ் ஆகியோர் அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

9-ம் தேதி இணையவழியில் நடைபெற்ற பாமக நிர்வாகக் குழுக் கூட்டத்தில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு முன், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். தாமதமானால் பாமக செயற்குழு உடனடியாகக் கூடி அரசியல் முடிவை எடுக்கும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 12.25க்கு திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்ற அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் 2-வது முறையாக பாமக நிறுவனர் ராமதாஸைச் சந்தித்துப் பேசினர். சுமார் 1 மணி நேரம் 15 நிமிடம் நீடித்த இச்சந்திப்பில் இட ஒதுக்கீடு குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இச்சந்திப்பு குறித்து அதிமுக அமைச்சர்களோ, பாமக தலைமையோ எவ்வித அதிகாரபூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி இந்து தமிழ் திசை