பாபநாசம், மணிமுத்தாறு அணையிலிருந்து 4200 கனஅடி தண்ணீர் திறப்பு: தாமிரபரணி கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை | Papanasam, Manimutharu dam water releaed

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தாமிரபரணியில் 4200 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரள்கிறது. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பியிருக்கும் நிலையில் இந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் உபரியாக திறந்துவிடப்பட்டிருக்கிறது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலையில் 142.15 அடியாக இருந்தது.

அணைக்கு வினாடிக்கு 2322.37 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 117.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2050 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

பாபநாசம் அணையிலிருந்து 2182.55 கனஅடியும், மணிமுத்தாறு அணையிலிருந்து 2038 கனஅடி தண்ணீருமாக மொத்தம் 4220 கனஅடி தண்ணீர் தாமிரபரணியில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரள்கிறது. ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க செல்ல வேண்டாம் என்றும், ஆற்றங்கரையில் புகைப்படம், செல்பி எடுக்கவும் செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மேலும் ஆற்றங்கரையை ஒட்டி தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கவனத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மற்ற அணைகளின் நீர் மட்டம் விவரம்:

சேர்வலாறு- 141.57 அடி, வடக்கு பச்சையாறு- 32 அடி, நம்பியாறு- 10.62 அடி, கொடுமுடியாறு- 27 அடி.

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும், பிறஇடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 18, சேர்வலாறு- 12, மணிமுத்தாறு- 19, நம்பியாறு- 22, கொடுமுடியாறு- 35, அம்பாசமுத்திரம்- 14.50, சேரன்மகாதேவி- 24.60, நாங்குநேரி- 19.50, ராதாபுரம்- 15, களக்காடு- 52.2, மூலக்கரைப்பட்டி- 35, பாளையங்கோட்டை- 20, திருநெல்வேலி- 40.

நன்றி இந்து தமிழ் திசை