பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தாமிரபரணியில் 3,800 கனஅடி தண்ணீர் திறப்பு குறுக்குத்துறை முருகன் கோயிலை சூழ்ந்த வெள்ளம் | Thamirabarani River

பாபநாசம், மணிமுத்தாறு அணை களில் இருந்து நேற்று காலையில் விநாடிக்கு 3,815 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணியில் வெள்ளம் கரை புரள்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிறஇடங் களிலும் மழை நீடிக்கிறது. நேற்று காலை 8 மணிநிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 29, சேர்வலாறு- 15, மணிமுத்தாறு- 41.6, கொடு முடியாறு- 10, அம்பாசமுத்திரம்- 32, சேரன்மகாதேவி- 22, நாங்குநேரி- 7.5, ராதாபுரம்- 9.4, களக்காடு- 14, மூலக்கரைப்பட்டி- 15, பாளையங்கோட்டை- 25, திருநெல்வேலி- 16.

பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பியதால் அணைக்கு வரும் தண்ணீர் உபரியாக தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. பாபநாசம் அணையிலிருந்து விநாடிக்கு 2,451 கனஅடி, மணிமுத்தாறு அணையிலிருந்து 1,364 கனஅடி என மொத்தம் 3,815 கனஅடி தண்ணீர் நேற்று காலையில் திறந்து விடப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரள்கிறது. திருநெல்வேலி குறுக்குத்துறையில் முருகன் கோயிலை மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 142 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,759.92 கனஅடி தண்ணீர் வந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 117.50 அடியாக இருந்தது. அணைக்கு 1,491 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மற்ற அணைகளின் நீர்மட்டம் விவரம்:

சேர்வலாறு- 141.04 அடி, வடக்கு பச்சையாறு- 31 அடி, நம்பியாறு- 10.62 அடி, கொடுமுடியாறு- 27 அடி.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆய்க்குடியில் 21.20 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணையில் 20 மி.மீ., ராமநதி அணையில் 18, தென்காசியில் 16.50, சிவகிரியில் 12, கருப்பாநதி அணையில் 8, செங்கோட்டை, குண்டாறு அணையில் தலா 4, அடவிநயினார் அணையில் 2 மி.மீ. மழை பதிவானது.

தொடர் மழையால் அணைக ளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடனாநதி அணை, குண்டாறு அணை ஆகியவை ஏற்கெனவே நிரம்பிவிட்டதால் உள்வரத்தாக வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. நேற்று கடனாநதி அணையில் இருந்து விநாடிக்கு 516 கனஅடி, குண்டாறு அணையில் இருந்து 4 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. ராமநதி அணை நீர்மட்டம் சிறிது உயர்ந்து 81.75 அடியாக இருந்தது. அணைக்கு 99 கனஅடி நீர் வந்தது. 30 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.75 அடியாக இருந்தது. அணைக்கு 39 கனஅடி நீர் வரும் நிலையில் 25 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 73.25 அடியாக இருந்தது.

அருவியில் வெள்ளப்பெருக்கு

மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. வெள்ளப்பெருக்கு காரணமாக பிரதான அருவியில் சில மணி நேரம் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. வெள்ளம் குறைந்த பின்னர், குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

நன்றி இந்து தமிழ் திசை