பறவைக் காய்ச்சல்: கண்காணிப்பை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

பறவைக் காய்ச்சல் பீதி நிலவும் நிலையில் நீர்நிலைகள், பறவை சந்தைகள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் கோழி பண்ணைகள் ஆகியவற்றைச் சுற்றி கண்காணிப்பை அதிகரிக்கவும், கோழி பண்ணைகளில் சுகாதார பாதுகாப்பை வலுப்படுத்தவும் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பொது விழிப்புணர்வை அதிகரிக்கவும், பறவை காய்ச்சல் (Bird Flu)  குறித்த தவறான தகவல்கள், வதந்திகள் பரவாமல் தடுக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

பறவையின் உடல்களை முறையாக அப்புறப்படுத்துவதை உறுதி செய்யவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹரியானாவின் (Haryana) பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள இரண்டு பண்ணைகளிலிருந்து கோழிகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர், விரைந்து நடவடிக்கை எடுக்க மாநிலத்தில்  சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது. 

குஜராத்தின் (Gujarat) சூரத் மாவட்டத்திலும், ராஜஸ்தானில் உள்ள சிரோஹி மாவட்டத்திலும் காகங்கள் / காட்டு பறவைகளின் மாதிரிகள் மூலம், பறவை காய்ச்சல் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் இருந்து 86 காகங்கள் அசாதாரணமாக இறந்ததாக தகவல்கள் கிடைத்தன.

இமாச்சலிலுள்ள நஹான், பிலாஸ்பூர் மற்றும் மண்டி ஆகிய இடங்களிலிருந்தும் காட்டு பறவைகளின் அசாதாரண இறப்பதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் மாதிரிகள் சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பறவை  காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை, இந்த நோய் கேரளா (Kerala), ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.