பறவைக் காய்ச்சல் எதிரொலி: டெல்லியில் கோழி இறைச்சி விற்பனை செய்வதற்கு தடை | chicken sales ban in delhi

 

chicken-sales-ban-in-delhi

புதுடெல்லி

டெல்லியில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, வடக்கு டெல்லி மற்றும் தெற்கு டெல்லி மாநகராட்சிகள் தங்கள் எல்லைக்குள் கோழி இறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ளன.

டெல்லியில் கடந்த திங்கட்கிழமை பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் இருந்து 8 மாதிரிகள் போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து, டெல்லி அரசு இதனை உறுதி செய்தது. இதையடுத்து, டெல்லி காசிபூரில் உள்ள கோழி இறைச்சி சந்தையை மூட டெல்லி அரசு உத்தரவிட்டது. டெல்லிக்கு வெளியில் இருந்து நகருக்குள் கோழி இறைச்சி வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

பறவைக் காய்ச்சல் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது என்பதால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் வடக்கு டெல்லி மற்றும் தெற்கு டெல்லி மாநகராட்சிகள் தங்கள் எல்லைக்குள் கோழி இறைச்சியை விற்பனை செய்யவும் மற்றும் அதனை இருப்பு வைக்கவும் அனைத்து இறைச்சி கடைகள் மற்றும் பதப்படுத்தும் நிலையங்களுக்கு நேற்று தடை விதித்தன. கோழி முட்டை மற்றும் கோழி இறைச்சி அடிப்படையிலான உணவுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கும் எச்சரிக்கை விடுத்தன. பொதுநலன் கருதி இந்த உத்தரவை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளன.

முன்னதாக டெல்லி சுகாதாரத் துறை விடுத்துள்ள அறிக்கையில், “பறவைக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். இந்த வகை வைரஸ் பறவைகளிடம் மட்டுமே அதிகம் காணப்படும். மனிதர்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. என்றாலும் முற்றிலும் சமைத்த (70 டிகிரி வெப்ப நிலையில் அரை மணி நேரம் வேக வைத்த) கோழி முட்டைகள் மற்றும் கோழி இறைச்சியை மட்டுமே உண்ண வேண்டும். பாதி வேக வைக்கப்பட்ட முட்டை மற்றும் இறைச்சியை உண்ண வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது. மத்திய கால்நடை வளர்ப்புத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கடந்த வாரம் தனது ட்விட்டர் பதிவில், “கோழி இறைச்சி மற்றும் முட்டையை முறையாக சமையுங்கள். கவலைப்பட ஏதுமில்லை” என்று கூறியிருந்தார்.

நன்றி இந்து தமிழ் திசை