பறவைக்காய்ச்சல்: கேரளாவில் மத்திய குழு ஆய்வு | Bird flu 

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவுதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய குழு இன்று ஆய்வு நடத்தியது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. மேலும், ஹரியாணா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவி ஏராளமான கோழிகள் இறந்துள்ளன.

குஜராத் மாநிலத்தின் சூரத் மாவட்டம் மற்றும் ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் காகம்/ வன பறவைகளின் மாதிரிகளில் பறவை காய்ச்சல் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, ஏழு மாநிலங்களில் (கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியாணா, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம்) பறவை காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள இரண்டு மாவட்டங்களிலும் ஒழிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. கண்காணிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் கேரள மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு மற்றும் தொற்று நோய் குறித்த விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய குழுக்கள் கேரளா சென்றடைந்து அங்கு பாதிப்புக்குள்ளான பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. மற்றொரு குழு ஹிமாச்சலப் பிரதேசம் சென்றடைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றது.

இந்தநிலையில் கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவுதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய குழு இன்று ஆய்வு நடத்தியது. இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது பறவைக்காய்ச்சல் பரவலை எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

நன்றி இந்து தமிழ் திசை