நைஜிரியாவில் உயிரிழந்த பொறியாளர்; வைகோவின் உதவியால் தமிழகம் கொண்டு வரப்பட்ட உடல்: உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி | Deceased engineer in Nigeria; Body brought to Tamil Nadu with the help of Vaiko: Thank you relatives for the flexibility

நைஜீரியாவில் மரணமடைந்த தமிழக பொறியாளரின் உடலை இந்தியா அனுப்ப வாய்ப்பில்லை என தூதரக அதிகாரிகள் மறுக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கவனத்திற்கு உறவினர்கள் கொண்டுச்செல்ல வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசி உடலை தமிழகம் கொண்டு வர உதவினார். அவருக்கு உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்தவர் பொறியாளர் செந்தூர்வேலன், குடும்பத்துடன் திருச்சியில் வசித்து வந்தார். ஆப்பிரிக்காவின் நைஜீரியா நாட்டில் உள்ள நிறுவனத்தில் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த வாரம் திடீர் மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.

உள்ளூரில் ஒருவர் மரணமடைந்தாலே உறவினர்களுக்கு என்ன செய்வதென்று பதற்றம் வந்துவிடும். வெளிநாட்டில் இறந்துள்ளார் என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் உறவினர்கள் தத்தளித்துள்ளனர்.

நைஜிரியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அணுகியபோது, அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை, எனவே, இங்கேயே இறுதிச் சடங்குகள் செய்து விடுகிறோம் என, நைஜீரியத் தலைநகர் லாகோசில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்க வெளிநாடுச் சென்றவர் கொடிய கரோனா காலத்திலும் பதை பதைப்பிலும் நைஜிரியாவில் பணியாற்றியவர் திடீர் மரணம் குடும்பத்தினரை கடுமையாக வாட்டியது. அவர் முகத்தை கடைசியாக பார்த்தே ஆகவேண்டும், அவர் உடலை எப்படியாவது இந்தியா கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என வைகோவை சந்தித்த குடும்பத்தினர் தங்கள் நிலையைல் விளக்கி கண்ணீர்விட்டு அழுதுள்ளனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திமுகவில் எம்பியாக இருந்த போதிலிருந்து தனது எம்பி நிதி மூலம் பலருக்கு கல்விக்கு, மருத்துவத்துக்கு என உதவியவர்.

செந்தூர்வேலன் உடலை தமிழகம் கொண்டு வருவதற்காக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் உடனடியாக பேசி நிலைமையை விளக்கியுள்ளார். நைஜீரியாவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கும், ஜனவரி 7-ம் தேதி, வைகோ இமெயில் மூலம் கடிதம் எழுதி நிலைமை விளக்கினார். வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

வைகோவின் தொடர் முயற்சி காரணமாக உடலை இந்தியா கொண்டு வரவே முடியாது இங்கேயே ஈமக்கிரியை செய்துவிடுவோம் என தெரிவித்த இந்திய தூதரக அதிகாரிகள் நிலை மாறியது. உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான ஆணைகள் இந்திய வெளியுறவுத்துறையிலிருந்து பறந்தது. இதையடுத்து அவரது உடல் தமிழகம் கொண்டுவரும் பணிகள் தொடங்கின.

செந்தூர் வேலன் உடல் நேற்று மாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று காலை திருச்சியில் தகனம் செய்யப்பட்டது.

இந்திய அரசின் தூதரக அதிகாரிகளே முடியாது என மறுத்த விவகாரத்தில் சாமானியர்களாக இருந்தாலும் அவர்கள் பிரச்சினையை உடனடியாக கணக்கில் எடுத்து வெளியுறவுத்துறை அமைச்சரிடமும், வெளியுறவுத்துறை அதிகாரிகளிடமும், நைஜிரியாவில் உள்ள தூதரக அதிகாரிகளிடமும் பேசி தீர்வு கண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை உறவினர்கள் கண்ணீர் வழிய நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

நன்றி இந்து தமிழ் திசை