தேவகோட்டை அருகே ஆற்று வெள்ளத்தால் 3 கிராமங்கள் துண்டிப்பு: அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மக்கள் அதிருப்தி | River floods cut off 3 villages near Devakottai

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆற்று வெள்ளத்தால் 3 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. இதை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தேவகோட்டை வட்டம் கீழ உச்சாணி கிராமத்தையும் துதியணி, சுண்டூரணி, ஆலன்வயல் ஆகிய கிராமங்களையும் இணைக்கும் சாலையின் குறுக்கே மணிமுத்தாறு செல்கிறது. இதற்காக ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் கீழ உச்சாணி அருகேயுள்ள கண்மாயின் கழுங்கு உடைந்து மணி முத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றுப் பாலத்தின் மேற்பகுதியிலும் தண்ணீர் செல்வதால் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

துதியணி, சுண்டூரி, ஆலன்வயல் ஆகிய 3 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும் கீழ உச்சாணிக்குத்தான் வர வேண்டும். மேலும் அவர்கள் கீழ உச்சாணி வழியாகத்தான் வெளியூர்களுக்குச் செல்ல முடியும். இந்நிலையில் வெள்ள நீர் கீழ உச்சாணியில் உள்ள பள்ளியிலும் புகுந்துள்ளது.

வெள்ளம் தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ஊராட்சித் தலைவர் லதா சந்திரசேகர் தகவல் கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டித் தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி இந்து தமிழ் திசை