தேர்தலுக்காக மாணவர்களுக்கு டேட்டா கார்டு என்கிறார் முதல்வர்: டாட்டா காட்ட தயாராகிவிட்டார்கள் மக்கள்: ஸ்டாலின் | Data card for students for elections says Chief Minister: Tata is ready to show People: Stalin

முதல்வர் பழனிச்சாமி தினமும் புதிய புதிய அறிவிப்புகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு முன்பு அதைப்பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை. இப்போது டேட்டா கார்டு தரப் போவதாக சொல்லியிருக்கிறார். டேட்டா கார்டு, டேட்டா கார்டு என்று சொல்லும் அவருக்கு டாட்டா காட்ட தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள் என ஸ்டாலின் பேசினார்.

கொளத்தூரில் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

“இங்கு நான் சிறப்புரையை அல்ல சுருக்க உரை ஆற்றவிருக்கிறேன். எப்போதும் பேச்சைக் குறைத்து நாம் செயலில் காட்ட வேண்டும் என்ற நிலையில் என்னை நான் தயார்படுத்திக் கொண்டு இருக்கிறேன், பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பி வைத்தோம், அதன் நிலை என்னவென்று தெரியவில்லை; தட்டிக் கேட்கின்ற அரசு தமிழகத்தில் இல்லை. நான்கு மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்ற போது, அந்த நீட் தேர்விலிருந்து எந்த முறையில் விலக்குப் பெற வேண்டுமோ, அந்த விலக்கைப் பெறுவோம் அதற்காக எங்களது சக்தி முழுவதையும் பயன்படுத்துவோம் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்வதை என்னுடைய கடமையாகக் கருதுகிறேன்.

பெண்கள் அனைவரும் கல்வி கற்கவேண்டும், வேலைகளுக்குச் செல்ல வேண்டும், சொந்தக் காலில் நிற்க வேண்டும், யாரையும் எதிர்பார்த்து வாழக் கூடாது என்ற நோக்கத்தில் தலைவர் கருணாநிதி மகளிர் சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்தியதைப் பின்பற்றி, இந்த அகாடமியை 2019-ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் தொடங்கினோம்.

நம்முடைய கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்தால் மட்டும் போதாது என்று, துறைமுகம், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு போன்ற தொகுதிகளிலும் துவங்கியிருக்கிறோம். இது 234 தொகுதிகளிலும் இதுபோன்ற பயிற்சி மையம் துவங்கப்பட்டால்தான் எனக்கு மகிழ்ச்சி. இந்த ஆட்சியில் அமையாது; நம்முடைய ஆட்சியில் நிச்சயமாக அமையும்.

இப்பயிற்சியில் இது வரை 5 பேட்ச் நிறைவடைந்து 348 மாணவிகள் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், பல்வேறு நிறுவனங்களில் நல்ல ஊதியத்தோடு பணியாற்றி வருகிறார்கள்.

அவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் 5 ஆம் பேட்ச் மாணவிகள் 82 பேர் பயிற்சி முடிந்து தேர்வு எழுதத் தயாராக இருக்கிறார்கள். தேர்வு எழுத இருக்கும் அந்த மாணவிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இளைஞர்கள் பலரும் என்னிடம், “மாணவிகளுக்கு மட்டும் தான் பயிற்சியா? மாணவர்களுக்குக் கிடையாதா? நாங்களும் உங்கள் தொகுதியைச் சேர்ந்தவர்கள்தானே !” என்று கேட்டார்கள். அவர்களது விருப்பத்தை ஏற்று, மாணவர்களுக்கான தனி பயிற்சி மையத்தைத் துவக்கி வைத்தேன்.

முதல் பேட்ச் மாணவர்கள் 80 பேர் படித்து வருகிறார்கள். இவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை நான் செலுத்தி உள்ளேன். அவர்கள் 80 பேருக்கும் மடிக்கணினியும் வழங்கி உள்ளேன். இந்த 80 பேரில் 24 பேருக்கு இதுவரை வேலை கிடைத்துள்ளது.

அவர்களை வாழ்த்துகிறேன். மற்றவர்களுக்கும் விரைவில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதில் இரண்டாம் பேட்ச் துவக்கப்பட்டுள்ளது. 75 மாணவர்கள் இதுவரை இப்பயிற்சியில் சேர்ந்து படித்து வருகிறார்கள்.

திருமணமான பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து, ஒரு கோரிக்கையை வைத்தார்கள். அவர்களுக்காக தையற்கலைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. இதில் 196 மகளிர் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு அதற்கான பட்டத்தை இன்று நான் வழங்கியுள்ளேன். உங்களை வளப்படுத்திக் கொள்ள இந்த பயிற்சி மையம் பயன்படும்.

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று சொல்வார்கள். தை பிறக்கப் போகிறது. வழி பிறக்கப் போகிறது.

தேர்தல் வருகின்ற காரணத்தால், முதல்வர் பழனிச்சாமி தினமும் புதிய புதிய அறிவிப்புகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு முன்பு அதைப்பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை. இப்போது டேட்டா கார்டு தரப் போவதாக சொல்லியிருக்கிறார். டேட்டா கார்டு, டேட்டா கார்டு என்று சொல்லும் அவருக்கு டாட்டா காட்ட தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்.

மக்களை ஏமாற்றி அந்தப் பொறுப்பில் இருந்து கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதனை நீங்கள் புரிந்துகொண்டாலே போதும் திமுகவைப் பொறுத்தவரையில் ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்காகப் பணியாற்றுகின்ற இயக்கம். ஆட்சியில் இல்லாத போதே இவ்வளவு பணிகளைச் செய்கிறோம் என்றால், ஆட்சியில் இருந்தால் எவ்வளவுப் பணிகளைச் செய்வோம் என்று எண்ணிப் பாருங்கள்.

அதற்குச் சிறு எடுத்துக்காட்டுதான் ‘ஒன்றிணைவோம் வா” செயல்திட்டம். அதன்மூலமாக கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களின் வாழ்வாதாரம் ஓரளவுக்குக் காப்பாற்றப்பட்டது என்பதை எடுத்துச் சொல்லி, அனைவருக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துகள் கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன்”.

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்

நன்றி இந்து தமிழ் திசை