தேனி மலைப்பாதைகளில் மண்சரிவு: சுற்றுலாப் பயணிகள் வர தடை நீட்டிப்பு | Landslide in Theni: Tourists,travellers banned

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் சாரல்மழையினால் குரங்கணி, அடுக்கம் உள்ளிட்ட மலைப்பாதைகளில் மண்,பாறை சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே சுற்றுலாப் பயணிகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக சாரல் மழை பெய்து வருகிறது. சாரல் மழை விட்டுவிட்டு பெய்வதால் பல பகுதிகளிலும் ஈரமான நிலையே உள்ளது. மேலும் வெயிலும் இல்லாததால் குளிர்நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இது தேனி மாவட்ட மலைப்பாதைகளில் மண்சரிவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக போடியில் இருந்து குரங்கணி செல்லும் மலைப்பாதையின் இடதுஓரம் முழுவதும் அடர்த்தியான மண்சரிவுகளையும், கற்பாறைகளையும் கொண்டுள்ளது.

தொடர் மழையால் பிடிப்புத்தன்மை குறைந்து சிறியஅளவிலான பாறைகள் உருண்டு வருகின்றன.

இதே போல் பெரியகுளம் கும்பக்கரையில் இருந்து அடுக்கம் செல்லும் மலைப்பாதையின் பல இடங்களில் இதுபோன்ற இலேசான மண்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. சாமக்காட்டுப்பள்ளம், குருடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே சிறிய அளவில் மண்சரிவுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், மழைநேரங்களில் மலைப்பாதையில் பயணிப்பது ஆபத்தானது. தொடர்ந்து ஈரமாகவே இருப்பதால் பிடிப்புத்தன்மை குறைந்து ஆங்காங்கே மண், பாறைகள் சரிகின்றன. உடனுக்குடன் இவை அகற்றப்பட்டு வருகின்றன என்றனர்.

இது போல் மேகமலையிலும் இதே நிலை தொடர்வதால் மலைப்பாதைகளில் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நன்றி இந்து தமிழ் திசை