‘துக்ளக் தர்பார்’ சர்ச்சை: சீமானிடம் பேசிய பார்த்திபன் | parthiban talked to seeman regarding tuglak durbar issue

‘துக்ளக் தர்பார்’ சர்ச்சை தொடர்பாக சீமானிடம் பார்த்திபன் பேசியுள்ளார்.

தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா, கருணாகரன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துக்ளக் தர்பார்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஜனவரி 11-ம் தேதி ‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீஸரை வெளியிட்டது படக்குழு. இதற்குப் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த டீஸர் நாம் தமிழர் கட்சியினரைக் கடும் கோபத்துக்கு ஆளாக்கியது. அதில் ‘ராசிமான்’ என்ற கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்துள்ளார் எனத் தெரிகிறது. ஒரு காட்சியில் அந்த போஸ்டர்களை எல்லாம் கிழிப்பது போன்றும் இடம்பெற்றுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானைத்தான் கிண்டல் செய்துள்ளார்கள் எனக் கருதி, படக்குழுவினருக்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் எச்சரிக்கை விடுத்தனர். இதனிடையே, இந்தச் சர்ச்சை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானிடம் பேசியுள்ளார் பார்த்திபன்.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் பார்த்திபன் கூறியிருப்பதாவது:

“நண்பர் சீமானிடம் நேரடியாக ‘துக்ளக் தர்பார்’ குறித்து விளக்கமளித்துவிட்டேன். அவரும் பெருந்தன்மையாகப் பதில் அளித்தார். ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டுமென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடம் தந்திருக்க மாட்டேன். இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல. (புதிய பாதை நமது) இருப்பினும் இடையறாது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடையப் போராடும் ‘நாம் தமிழர்’ தோழர்களின் முயற்சிகளைக் கிண்டல் செய்ய நான் இடம் தரமாட்டேன். எனவே, உள்நோக்கமின்றி நடந்த பெயர் பிரச்சினையை இயக்குநரிடம் கூறி, ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன்”.

இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார் பார்த்திபன்.

நன்றி இந்து தமிழ் திசை