திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி: முடிவை மாற்றிய ‘ஈஸ்வரன்’ படக்குழு | eeswaran team tweet

திரையரங்க உரிமையாளர்களின் போர்க்கொடியால், தங்களது முடிவை மாற்றியுள்ளது ‘ஈஸ்வரன்’ படக்குழு.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஈஸ்வரன்’. ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.

பொங்கல் விடுமுறையைக் கணக்கில் வைத்து ஜனவரி 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காகத் தீவிரமாக விளம்பரப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, ஜனவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் அதே நாளில், வெளிநாட்டு வாழ் மக்களுக்காக OLYFLIX என்ற ஓடிடி தளத்திலும் ‘ஈஸ்வரன்’ வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இந்த அறிவிப்பால் ‘ஈஸ்வரன்’ படக்குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியாவதால் திரையரங்குகளில் ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிடப் போவதில்லை எனப் போர்க்கொடி தூக்கினர். இதனால் திட்டமிட்டபடி ‘ஈஸ்வரன்’ வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

திரையரங்க உரிமையாளர்களின் அறிவிப்பால், ‘ஈஸ்வரன்’ படக்குழு தங்களுடைய முடிவை மாற்றிவிட்டது. OLYFLIX ஓடிடி தளத்தில் வெளியாகாது என்று அறிவித்துள்ளனர். இதனால் ‘ஈஸ்வரன்’ வெளியீட்டில் ஏற்பட்ட சிக்கல் தீர்ந்துள்ளது.

நன்றி இந்து தமிழ் திசை