திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் கருடசேவை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் | karuda sevai

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும்தை பிரம்மோற்சவ விழாவில், நேற்று நடைபெற்ற கருடசேவையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூரில் அஹோபில மடத்தின் பராமரிப்பின்கீழ் உள்ளவீரராகவ பெருமாள் கோயிலில் கடந்த 9-ம் தேதி தை பிரமோற்சவ விழா தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருடசேவைநேற்று நடைபெற்றது.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மிக எளிமையாக நடந்த இந்நிகழ்ச்சியில் அதிகாலை 4.30 மணிக்கு பல்வகை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வீரராகவ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து வழக்கமாக நடைபெறும் வீதி உலாவுக்கு பதில், காலை 7 மணிக்கு கருட வாகனத்தில் வீரராகவ பெருமாள் கோயில்பிரகாரத்தில் உலா சென்றார். இதையடுத்து வாகன மண்டபத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த கருடசேவையில் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, திருத்தணி, ஆவடி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வீரராகவ பெருமாளை தரிசனம் செய்தனர். மேலும், இன்று காலையில்மார்கழி அமாவாசையை முன்னிட்டு, வீரராகவபெருமாள் ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்குகாட்சியளிக்க உள்ளார்.

நன்றி இந்து தமிழ் திசை