திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: மதுரை ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா ஆவேசம் | Thirumavalavan should be arrested under goondas: H.Raja

இந்துக்களின் உணர்வுகளைத் தொடர்ந்து புன்படுத்தி வரும் திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசினார்.

மதுரை மேலமடையில் உள்ள புறநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தைச் சேதப்படுத்தியவர்களை கண்டித்து அண்ணாநகரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மகா சசீந்திரன் தலைமை வகித்தார்.

இதில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசியதாவது:

கடந்த ஓராண்டாகவே, குறிப்பாக குடியுரிமைச் சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து தமிழக மக்கள் உண்மைகளைப் புரிந்து கொள்ள தொடங்கிவிட்டனர்.

பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் இந்து மதத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வந்தனர். இப்போது அந்த வேலையை மு.க.ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

பாஜக நடத்தும் நம்ம ஊர் பொங்கல் விழாவுக்கு திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகளும், எஸ்டிபிஐ கட்சியும் இடையூறு செய்துள்ளனர்.

திமுக சமத்துவ பொங்கல் நடத்தி வருகிறது. இதற்கு பாஜக ஆட்சேபம் தெரிவிக்கிறதா? பாஜக பொங்கல் விழா நடத்தினால் உங்களுக்கு ஏன் எரிகிறது.

எஸ்டிபிஐ தடை செய்யப்பட வேண்டிய அமைப்பு என முன்பே கூறினேன். அதை செய்திருந்தால் பாஜக அலுவலகம் தாக்கப்பட்டிருக்காது. மதுரை மாநகர் பல்வேறு படுகொலையை பார்த்த நகரம். அதுபோன்ற சூழல் மீண்டும் திரும்பி வருகிறது.

மதுரையில் மீண்டும் பயங்கரவாதம், வன்முறை தலை தூக்கி வருகிறது. இதை அனுமதிக்க கூடாது. பயங்கரவாதம், வன்முறையை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும். திருமாவளவன், எஸ்டிபிஐயை வளர்த்து விடுவது தமிழகத்துக்கு ஆபத்தாக அமையும்.

திருமவளவன் தீய சக்தி. இந்துக்களின் மத உணர்வை புன்படுத்தி வருகிறார். அவரை ஏன் இதுவரை போலீஸார் கைது செய்யவில்லை. தொடர்ந்து குற்றச்செயல் புரிந்து வருகிறார். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மதுரையில் பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்களை 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு எச்.ராஜா பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பாஜக பொதுச் செயலர் ஆர்.ஸ்ரீநிவாசன், வேலூர் இப்ராகிம், மதுரை மாவட்ட பார்வையாளர் கதலி நரசிங்க பெருமாள், நகர் மாவட்டத் தலைவர் கே.கே.சீனிவாசன், முன்னாள் தலைவர் சசிராமன், துணைத் தலைவர் ஹரிகரன், கராத்தே ராஜா, ஊடகப்பிரிவு தலைவர் தங்கவேல்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி இந்து தமிழ் திசை